மனசாட்சி படி நடந்துள்ளேன் : ராகுல் பாத யாத்திரையில் பங்கேற்ற பின் கமல்ஹாசன் கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2022, 5:56 pm
Kamal - Updatenews360
Quick Share

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தானை கடந்து நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. பல்வேறு நகரங்கள் வழியாக ராகுல்காந்தி தலைமையில் இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.

இந்த பாதயாத்திரைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நடிகர், நடிகைகள் என பல தரப்பினரும் இந்த பாத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் இணைந்துள்ளனர்.

இதனிடையே, ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று 108-வது நாளை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அரியானாவில் யாத்திரை நடைபெற்ற நிலையில் யாத்திரை இன்று டெல்லிக்குள் நுழைந்துள்ளது.

டெல்லிக்குள் நுழைந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன், அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இன்று காலை யாத்திரை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் தற்போது நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கமல்ஹாசன் இணைந்து நடைபயணம் மேற்கொண்டார்.

பின்னர் டெல்லி,செங்கோட்டையில் பாரத் ஜோடோ யாத்திரை கூட்டத்தில் கமல்ஹாசன் உரையாற்றினார். அவர் கூறியதாவது ; தேச ஒற்றுமைக்காக யாத்திரையில் பங்கேற்றேன்.

மாற்று கொள்கைகள் இருந்தாலும், தேச ஒற்றுமைக்காக யாத்திரையில் பங்கேற்பு. என்னுடைய தந்தை காங்கிரஸை சேர்ந்தவர். ராகுல் காந்தி தன்னை ஒரு தமிழன் என்று குறிப்பிட்டிருந்தார், அதனால் அவர் எனக்கு சகோதரர் .

ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப்பேரன், நான் காந்தியின் கொள்ளுப்பேரன் .அரசமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன். ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் பங்கேற்பது அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என பலர் கூறினார்கள்.

ஆனால் எனது மனசாட்சியை கேட்டு பயணத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தேன். அரசியலமைப்புச் சட்டத்திற்கு நெருக்கடி வரும்போது எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், நான் போராட்டத்தில் இறங்குவேன். என்னைப் பொறுத்தவரை இந்திய ஒற்றுமை பயணம் என்பது ஒரு தொடக்கம்தான் எனக்கூறினார்.

Views: - 338

0

0