ஆந்திர அரசை கவிழ்க்க முயல்கிறாரா உச்சநீதிமன்ற நீதிபதி..? ஜெகன் மோகன் ரெட்டி பகீர் குற்றச்சாட்டு..!

Author: Sekar
11 October 2020, 10:23 am
jagan_mohan_reddy_updatenews360
Quick Share

இந்தியாவின் உச்ச நீதித்துறைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி, உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியும், அடுத்த தலைமை நீதிபதியாக வருவார் என எதிர்பார்க்கப்படும் நீதிபதி என்.வி.ரமணா ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் அமர்வுகளில் செல்வாக்கு செலுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு எழுதிய விரிவான கடிதத்தில், ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி மூலம் நீதிபதி ரமணா மாநிலத்தில் நீதி நிர்வாகத்தின் செல்வாக்கை செலுத்தத் தொடங்கினார் என்று குற்றம் சாட்டினார். தனது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மே 2019’இல், சந்திரபாபு நாயுடு தனது ஆட்சியில் 2014-2019’க்கு இடையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

“நீதிபதி என்.வி.ரமணா உயர்நீதிமன்றத்தின் அமர்வுகளில் ஒரு சில கெளரவ நீதிபதிகளின் பட்டியல் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு முக்கியமான சில வழக்குகள் ஒரு சில கெளரவ நீதிபதிகளுக்கு எவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதற்கான எடுத்துக்காட்டுகள் மூலம் அவரின் செல்வாக்கை உணரலாம்” என்று முதல்வர் தனது எட்டு பக்க கடிதத்தில் கூறினார்.

நீதிபதி ரமணா, சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் உயர்நீதிமன்றத்தின் ஒரு சில நீதிபதிகளுக்கு இடையிலான உறவை காட்டுவதாக அவர் கூறியதோடு அதற்கான ஆவணங்களையும் முதலமைச்சர் இணைத்து அனுப்பியுள்ளார்.

தலைமை நீதிபதி போப்டேவுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது மிக மூத்த நீதிபதி ரமணா மற்றும் சில மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கைகளை மறைப்பதற்காக மாநிலத்தில் தனது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்ததாக முதலமைச்சர் குற்றம் சாட்டினார். 

“உச்சநீதிமன்றத்தின் மரியாதைக்குரிய நீதிபதிகள் மூலம் ஸ்ரீ என் சந்திரபாபு நாயுடு தனிப்பட்ட முறையில் கண்காணிப்பு அமைப்புகளை அரசியல்மயமாக்குவது வேதனையளிக்கக் கூடிய விஷயம். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஸ்திரமின்மைக்குள்ளாக்கவும் கவிழ்க்கவும் உயர்நீதிமன்றம் பயன்படுத்தப்படுகிறது என்பதை உண்மைகள் தெளிவாக நிரூபிக்கும். மாண்புமிகு நீதிபதி என்.வி.ரமணா மூலம் சந்திரபாபு நாயுடுவின் வெளிப்படையான மற்றும் இரகசிய நடவடிக்கைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆந்திர மாநில அரசை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது” என கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் பட்டியலில் நீதிபதி ரமணா செல்வாக்கு செலுத்துவதாக அவர் கூறினார். இதன் மூலம் நாயுடுவின் நலன்களுக்கான கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விஷயங்கள் நீதிபதிகள் ஏ.வி. சேஷா சாய், நீதிபதி எம்.சத்தியநாராயண மூர்த்தி, நீதிபதி டி.வி. எஸ்.எஸ்.சோமயஜுலு, நீதிபதி டி.ரமேஷ். மூலம் கவனிக்கப்படுகிறது என அவர் மேலும் கூறினார்.

அமராவதி நில முறைகேடு உள்ளிட்ட சில வழக்குகளில் தெலுங்கு தேசம் கட்சியின் நலன்களைப் பாதுகாக்க நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளையும் ரெட்டி பட்டியலிட்டார்.

Views: - 35

0

0