கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்…? சித்தராமையாவுடன் மல்லுகட்டும் மூத்த தலைவர் ; தேர்தல் முடிவுகளுக்கு முன்பே வெடித்த மோதல்

Author: Babu Lakshmanan
13 May 2023, 12:05 pm
Quick Share

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும், ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Congress - Updatenews360

ஆரம்பத்தில் காங்கிரஸ், பாஜக மாறிமாறி முன்னிலை பெற்று வந்தாலும், தற்போது, அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை சற்று கடந்து, 118 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பாஜக 71 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதேவேளையில், மதசார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பாஜக முதலமைச்சர் வேட்பாளர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்து வருகின்றனர். அதேவேளையில், பாஜகவில் இருந்து காங்கிரஸ் இணைந்து போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகவே கூறி இருப்பதால், காங்கிரஸ், பாஜக கட்சிகளின் தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தற்போதே பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணிக்காக ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் தேவேகவுடா, குமாரசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதால், காங்கிரஸ் கட்சி இன்னும் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. அதேவேளையில், முதல்வராவதற்கு சித்தராமையா ஒருபுறமும், மறுபக்கம் இதுதான் சரியான தருணம், முதல்வராக வேண்டும் என்று டிகே சிவகுமாரும் முயற்சித்து வருகிறார்.

கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் முதல்வர் பட்டியலில் முதல் ஆளாக இருக்கிறார். மைசூர் மாவட்டத்தில் சித்தராமணஹண்டி பகுதியைச் சேர்ந்த இவர், 2013-2018 வரை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் எந்த இடையூறும் இல்லாமல் ஆட்சி செய்தவர் என்ற பெருமையை பெற்றவர். அதேவேளையில், 76 வயது என்பது சித்தராமையாவுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. மேலும், கடந்த ஆட்சியில் குருபா சமூகத்தினருக்கு அதிகளவில் சலுகைகளை வழங்கிய சித்தராமையா, லிங்காயத் மற்றும் ஒல்லிக்கர் சமூகத்தினருக்கு பெரியளவில் இவர் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும், ஊழல் புகாரும் பெரிய அளவில் பேசப்பட்டன.

Siddharamaiah - updatenews360

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழல் புகார்களை சாதகமாக பயன்படுத்தி, முதலமைச்சராகும் தனது லட்சியத்தை நிறைவேற்றி விடலாம் என்று டிகே சிவகுமார் மனகணக்கு போடுவதாகவும் சொல்லப்படுகிறது. கனகபுராவில் இருந்து எட்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கர்நாடகாவில் செல்வாக்கு மிக்கவராக மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் விசுவாசியாகவும், நெருக்கடி காலங்களில் தூணாகவும் இருந்து வருகிறார். அதோடு, நாட்டின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக இருப்பதுடன், மற்ற மாநில தேர்தல்களுக்கும், வரும் மக்களவைத் தேர்தலுக்கும் நிதி திரட்ட சிவகுமார் சரியான ஆள் என்று தலைமை இன்றும் இவரது மீது நம்பிக்கை வைத்து இருக்கிறது.

இதுபோன்று பல சாதகமான அம்சங்கள் இருந்தாலும், இவரது அரசியல் அனுபவம் என்பது சித்தராமையாவிடம் இருந்து குறைந்ததாகவே இருந்து வருகிறது. எம்எல்ஏக்களை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் சித்தராமையா. அந்தளவிற்கு அனுபவம் இல்லாதவர் டிகே சிவகுமார் என்ற கருத்தும் உள்ளது. இவற்றை எல்லாம் ஆய்வு செய்துதான் முதல்வரை காங்கிரஸ் தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.

dk_shivakumar_updatenews360

இதனிடையே, கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ள நிலையில், டிகே சிவகுமாரை முதலமைச்சராக்க வேண்டும் என்று இப்போதே அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவை ஆக்க வேண்டும் என்று அவரது மகன் கோரிக்கை விடுத்த நிலையில், காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

Views: - 380

0

0