பாஜக நிர்வாகியின் கழுத்தில் மிதித்த போலீசார்… முதலமைச்சர் வருகையின் போது நடந்த சம்பவம் ; வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
13 May 2023, 1:34 pm
Quick Share

நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஆந்திர முதலமைச்சர் வருகையின் போது, போராட்டம் நடத்த முயன்ற பாஜக நிர்வாகியின் கழுத்தில் போலீசார் மிதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நெல்லூர் மாவட்டம் காவாலியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி காரில் வந்தார். அப்போது, ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ஊழல் பெருகி விட்டதாகவும், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயகிரி சந்திப்பில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த சமயம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கான்வாய் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. இதனைக் கண்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் குண்டலப்பள்ளி பர நாயக்கா, ராமி ரெட்டி பிரதாப் குமார் ரெட்டி எம்.எல்.ஏ, பொறுப்பாளர்கள் முகிராளா சுரேஷ் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர், போலீசாரின் தடுப்பையும் மீறி முதலமைச்சரின் கான்வாய் வாகனங்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த போலீசார் பா.ஜ.கவினர் மீது தாக்குதல் நடத்தினர். முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் காரை மறிக்க முயன்ற சுரேஷை டி.எஸ்.பி. வெங்கடரமணா கீழே தள்ளி 2 கை, கால்களையும் மடித்துக்கொண்டு கழுத்தில் 2 கால்களால் மிதித்தார். கோடை வெயிலால் கொதிக்கும் சாலையில் விழுந்த சுரேஷ், கழுத்தில் மிதித்ததால் வலி தாங்க முடியாமலும், மூச்சு விட முடியாமலும் வேதனை அடைந்தார்.

இதனைக் கண்ட பா.ஜ.க.வினர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Views: - 331

0

0