பைப்ப திறந்தா பணமா கொட்டுது… பலே கில்லாடி அதிகாரியினால் திகைத்து போன சோதனை அதிகாரிகள்..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
24 November 2021, 6:31 pm
karnataka raid - updatenews360
Quick Share

கர்நாடகாவில் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், சட்டவிரோதமாக சம்பாரித்த பணத்தை, கழிவுநீர் குழாயில் மறைத்து வைத்திருந்த சம்பவம் ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு திகைப்பையூட்டியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மாநிலம் முழுவதும் 15 அதிகாரிகளைக் குறி வைத்து 68 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விவசாயத்துறை இணை ஆணையர் ருத்ரேஷ் அப்பா வீட்டில் மட்டும் மூன்றரை கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம், 15 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 100 கோடிக்கு மேல் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வந்தாலும், கலபுரகி பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரி சாந்தப்பா கவுடா வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த டம்மி குழாயில் கட்டு கட்டாக பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் குச்சியை விட்டு குத்தும் போதும், ஒவ்வொரு கட்டாக பணம் விழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களின் விபரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், சாந்தப்பா கவுடாவின் வங்கிக் கணக்கும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 206

0

0

Leave a Reply