முதல்வரைத் தொடர்ந்து மாநில கட்சித் தலைவரும் மாற்றம்..! உத்தரகண்டில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளும் பாஜக..!

12 March 2021, 1:06 pm
madan_kaushik_updatenews360
Quick Share

உத்தரகண்டில் முதல்வர் மாற்றத்திற்குப் பிறகு தற்போது, கட்சியின் மாநிலத் தலைவரும் மாற்றப்பட்டுள்ளார். உத்தரகண்ட் மாநில பாஜகவின் புதிய தலைவராக மதன் கவுசிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 2020 முதல் மாநிலத்தில் கட்சிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த பன்ஷிதர் பகத்தை மாற்றி மதன் கவுசிக் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பன்ஷிதர் பகத் புதிய முதல்வர் தீரத் சிங் ராவத்தின் அமைச்சரவையில் சேரலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த வார தொடக்கத்தில் முதல்வர் பதவியில் இருந்து விலகிய திரிவேந்திர சிங் ராவத்தின் கீழ் கவுசிக் அமைச்சராக இருந்தார். ஹரித்வார் தொகுதியைச் சேர்ந்த நான்கு முறை எம்.எல்.ஏ.வான கவுசிக் 2007-2012 பாஜக அரசிலும் அமைச்சராக பணியாற்றினார். அவர் முதலில் 2002, 2007, 2012 மற்றும் 2017’ஆம் ஆண்டுகளில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நைனிடால் மாவட்டத்தில் உள்ள கலதுங்கி தொகுதியின் எம்எல்ஏவாக பன்ஷிதர் உள்ளார். அவர் ஜனவரி 2020 முதல் பாஜகவின் மாநில பிரிவுக்கு தலைமை தாங்கி வருகிறார்.

மாநிலத்தில் ஒரு ராஜ்புத் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் கட்சி உறுதியாக இருந்ததால், அங்கு அமைப்புக்கு தலைமை தாங்க ஒரு பிராமண முகமாக கவுசிக் தேர்தெடுக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

ராஜபுத்திரர்கள் மற்றும் பிராமணர்கள் உத்தரகண்டில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு சமூகங்கள் ஆகும். இங்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

திரிவேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக தீரத் சிங் ராவத் கடந்த புதன்கிழமை முதல்வராக பதவியேற்றார். அவரது தலைமைக்கு எதிரான அதிருப்தி காரணமாக பாஜக தலைமையால் அவர் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 25

0

0