ஆசிட் வீச்சில் முடிந்த பேஸ்புக் காதல்: காதலன் மீது ஆசிட் வீசிய 2 குழந்தைகளின் தாய்…கேரளாவில் ஷாக்..!!

Author: Rajesh
22 November 2021, 10:21 am
Quick Share

திருவனந்தபுரம்: திருமணம் செய்துகொள்ள மறுத்த பேஸ்புக் காதலன் மீது 2 குழந்தைகளின் தாய் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இளைஞர் அருண்குமார். இவருக்கு பேஸ்புக் மூலம் இடுக்கி மாவட்டம் அடிமல்லி பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஷீபா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். ஹாய், ஹலோ என ஆரம்பித்த பேஸ்புக் உரையாடல் நாளடைவில் மணிக்கணக்கில் தொடர்ந்துள்ளது.

இருவரும் பேஸ்புக்கில் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். உன்னை திருமணம் செய்துக்கொள்வேன் என சத்தியம் செய்துள்ளார். இதனையடுத்து இருவரும் காதல் பறவைகளாக சிறகடித்துள்ளனர். இந்நிலையில் இளைஞருக்கு வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்த்துள்ளனர்.

வடிவேலுவின் காமெடி ஒன்றில், நான் உனக்காக என் அப்பா அம்மாவை விட்டு வந்துள்ளேன் என இளைஞர் கூறுவது போலவும் அதற்கு அவரது காதலி நான் உனக்காக என் குழந்தைகளையே விட்டு வந்துள்ளேன் எனக் கூறுவது போல் இருக்கும். இந்த காமெடி காட்சி இந்த காதல்ஜோடி விவகாரத்தில் உண்மையாகியுள்ளது.

ஷீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த விவகாரம் தெரியவந்ததையடுத்து ஷீபாவுடன் பேசுவதை அருண்குமார் தவிர்த்துள்ளார். தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஷீபாவை விட்டு விலகியுள்ளார்.

இதனையடுத்து, உன்னுடன் நேரில் பேச வேண்டும் அடிமல்லிக்கு வா எனவும், மேலும் பணம் கேட்டு ஷீபா மிரட்டியுள்ளார். இல்லையென்றால் உன் திருமணத்தையே நிறுத்திவிடுவேன் எனக் கூறியதால், ரூ.2 லட்சம் கொடுப்பதற்கு இளைஞர் ஒத்துக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அருண் குமார் தனது நண்பருடன் பேசிய பணத்துடன் அங்கு வந்துள்ளார். இரும்புல்லா பகுதியில் உள்ள தேவாலயத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஷீபா தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அருண் குமார் மீது வீசியுள்ளார். ஆசிட் வீச்சால் அருண் குமார் முகம் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மீட்ட அவரது நண்பர் அடிமல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

இதில் அருண்குமாருக்கு ஒரு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஷீபாவுக்கு முகத்தில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் இளைஞர் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரையடுத்து ஷீபா கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் இருந்தும், பேஸ்புக்கில் மலர்ந்த தடம்மாறிய காதலால் இளைஞர் மீது ஆசிட் வீசிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 408

0

0