“தோனிக்கு ஃபேர்வெல் மேட்ச்” – பி.சி.சி.ஐ உயர் அதிகாரி விருப்பம்..!

20 August 2020, 10:11 am
Quick Share

எம்.எஸ் தோனிக்கு ஃபேர்வெல் மேட்ச் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம் என பி.சி.சி.ஐ உயர் அதிகாரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகன் மகேந்திர சிங் தோனி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உலகம் முழுவதும் உள்ளது. கிரிக்கெட்டை தாண்டி இவர் மீது உணர்வு பூர்வமான அன்பு கொண்ட ரசிகர்களும் ஏராளம்.

இப்படி தனக்கென்ற அடையாளத்தை ரசிகர்களை வைத்து உருவாக்கிய தோனி யாரும் எதிர் பாராத விதமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து ரசிகர்கள் தங்கள் வேதனையை சமூக வலைதள பக்கங்களில் கொட்டி தீர்த்தனர். இந்த நிலையில், “தோனிக்கு ஃபேர்வெல் மேட்ச்” நடத்த வேண்டும் என கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது குறித்து பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவரிடம் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கேட்டபோது, அவர், இந்திய அணிக்கு தற்போது சர்வதேச போட்டிகள் இல்லாத சூழலில் ஐபிஎல் தொடருக்கு பின் இது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், இந்திய கிரிக்கெட் அணிக்காக தன் முழு உழைப்பை வழங்கியவர் மகேந்திர சிங் தோனி என குறிப்பிட்ட அதிகாரி, மரியாதையுடன் பிரியாவிடை கொடுத்து அவரை அனுப்பி வைக்க வேண்டியது பிசிசிஐ-யின் கடமை எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தோனி மற்ற வீரர்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானவர் எனவும் அவருக்கு ஃபேர்வெல் மேட்ச் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம் எனவும் கூறினார். இது குறித்து தோனியிடம் பேசி அவர் “ஓகே” சொன்னால் அவர் எந்த ஊரில் வைக்க வேண்டும் என விரும்புகிறாரோ அங்கு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதிகாரி தெரிவித்தார்.