பீகார் சட்டசபையின் சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் விஜய் குமார் சின்ஹா வெற்றி..!

25 November 2020, 3:14 pm
vijay_kumar_sinha_updatenews360
Quick Share

பாஜக எம்.எல்.ஏ விஜய் குமார் சின்ஹா இன்று பீகார் சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது முறை எம்எல்ஏவாக இருக்கும் விஜய் குமார் சின்ஹா எதிர்க்கட்சியின் அவத் பிஹாரி சவுத்ரியை 12 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆர்ஜேடியைச் சேர்ந்த சவுத்ரி ஐந்தாவது முறை எம்எல்ஏவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் குமார் சின்ஹாவுக்கு ஆதரவாக 126 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், அவத் பிஹாரி 114 வாக்குகளைப் பெற்றார்.

இந்த சபாநாயகர் தேர்தல், நூலிழையில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட சட்டசபையில் எதிர்க்கட்சியின் மெகா கூட்டணி ஆகிய இரண்டிற்கும் தங்கள் வலிமையை நிரூபிக்கும் முதல் சோதனையாக பார்க்கப்பட்ட நிலையில், ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக, ஐக்கிய ஜனதா தளம், எச்.ஏ.எம் மற்றும் வி.ஐ.பி. ஆகிய கட்சிகளைக் கொண்டுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 122 தேவை என்ற நிலையில் மூன்று இடங்கள் அதிகம் பெற்று 125 இடங்களை வென்றதன் மூலம், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டது. ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி 110 இடங்களைப் பெற்றது.

முன்னதாக சபாநாயகர் தேர்தலுக்காகவும், முதலமைச்சர் நிதீஷ் குமார் சபையில் இருப்பதற்கும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து சபையில் அமளியில் ஈடுபட்ட நிலையில், தற்காலிக சபாநாயககர் ஜித்தன் ராம் மஞ்சி, அவர்களை சமாதானப்படுத்தி, புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் பணியை முடித்துள்ளார்.

Views: - 0

0

0