ஒரு நாள் பிரிட்டன் தூதரான இந்திய மாணவி…!!!

By: Aarthi
11 October 2020, 7:03 pm
Quick Share

டெல்லி: இந்தியாவுக்கான பிரிட்டன் தூதராக டெல்லியை சேர்ந்த 18 வயது மாணவி ஒரு நாள் பணியாற்ற அனுமதித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.

2017ம் ஆண்டு முதல் பிரிட்டன் தூதரகம் ‘ஒரு நாள் தூதரக உயர் ஆணையர்’ என்ற போட்டியை நடத்தி வருகிறது. அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண்கள் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டியில், 18 முதல் 23 வயது வரையிலான இந்திய பெண்களை தங்களின் மிக மூத்த அதிகார பதவியான தூதரக உயர் ஆணையர் பதவியை ஏற்க ஒரு நாள் அனுமதிக்கின்றனர்.

இந்த ஆண்டு போட்டிக்காக, பாலின சமத்துவத்திற்கான உலகளாவிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளை பற்றி ஒரு நிமிட வீடியோவை சமர்பிக்கும் படி கேட்டிருந்தனர். அதன்படி டில்லியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி சைதன்யா வெங்கடேஸ்வரன் பிரிட்டன் தூதரக உயர் ஆணையராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இப்போட்டியின் மூலம் தூதரக அதிகாரியாகும் நான்காவது பெண் ஆவார்.

கடந்த புதனன்று ஒரு நாள் தூதரக அதிகாரியாக பதவியேற்ற இவர், தூதரக துறை தலைவர்களுக்கு பணிகளை ஒதுக்கினார். மூத்த பெண் காவல்துறை அதிகாரிகளுடன் உரையாடுவது, பத்திரிகையாளர்களைச் சந்திப்பது, மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்டெம் உதவித் தொகை திட்டத்தின் தாக்கத்தை ஆய்வு செய்வது போன்ற பணிகளை அவர் செய்தார் என பிரிட்டன் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Views: - 40

0

0