பஞ்சாப் முதல்வராகப் போகும் #metoo புகாரில் சிக்கிய சரண்ஜித் சன்னிக்கு வலுக்கும் எதிர்ப்பு: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ArrestCharanjitChanni…!!

Author: Aarthi Sivakumar
20 September 2021, 10:22 am
Quick Share

பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2019ம் ஆண்டு, முதலமைச்சருடன் ஏற்பட்ட மோதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மந்திரிசபையில் இருந்து விலகினார்.

அதில் இருந்து அவருக்கும், அமரிந்தர் சிங்குக்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. அது மோதலாகவும் மாறி இருவரும் ஒருவரையொருவர் விமர்சிக்கும் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்கள், அமரிந்தர் சிங்குக்கு எதிராக மாறின.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அமரிந்தர் சிங், மாநிலத்தில் தனக்கு எதிராக நடந்து வருகிற சமீபத்திய நிகழ்வுகளை வேதனையுடன் விவரித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து அவர் அதிரடியாக பதவி விலகினார். மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதனையடுத்து நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அமரிந்தர் சிங் மந்திரிசபையில் தொழில்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள எளிய நிகழ்ச்சியில் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இந்நிலையில், சரண்ஜித் சிங் சன்னிக்கு எதிராக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கு காரணம், 2018இல் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், அமைச்சர் சரண்ஜித் சிங் தனக்கு விரும்பத்தகாத குறுஞ்செய்தியை அனுப்பியதாக குற்றம்சாட்டினார். அந்த நேரத்தில் #metoo இயக்கம் இந்தியாவில் தீவிரமாக இருந்தது. ஆனால், அந்த ஐஏஎஸ் அதிகாரி சரண்ஜித் சிங்குக்கு எதிராக எழுத்துபூர்வ புகாரை தெரிவிக்கவில்லை.

அத்துடன் அந்த பிரச்னை முடிவுக்கு வந்ததாக அப்போதைய முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவித்தார். ஆனால், இந்த ஆண்டு மே மாதம், அதே பெண் அதிகாரியின் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பஞ்சாப் மகளிர் ஆணையம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியபோது, பழைய விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது.

மேலும், ட்விட்டரில் சரண்ஜித் சிங் சன்னிக்கு எதிராக #ArrestCharanjitChanni #MeToo போன்ற ஹேஷ்டாக்குகளை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகிறது.

சரண்ஜித் சிங் சன்னி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 33% வரை தலித்துகள் உள்ளனர். எனவே, அடுத்த ஆண்டு நடைபெற்று சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Views: - 187

0

0