சீன மோதலுக்கு மத்தியில் எல்லைக்கு பயணம் மேற்கொள்ளும் பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு..! காரணம் இது தானா..?

Author: Sekar
13 October 2020, 8:02 pm
Quick Share

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லை மோதல் நீடிக்கும் நிலையில், படையினருக்கான குளிர்கால ஆடைகள், தங்கும் வசதி மற்றும் ரேஷன்கள் தொடர்பான அம்சங்களைப் பற்றிய கள நிலைமையை அறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு லடாக் செக்டருக்கு செல்ல உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான பொதுக் கணக்குக் குழு (பிஏசி) உறுப்பினர்கள் அக்டோபர் 28-29 தேதிகளில் லேவுக்கு வருவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சவுத்ரி எழுதிய கடிதத்தின் பின்னர் இந்த பயணம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு அனுப்பப்பட்டுள்ள படையினருடன் தொடர்புகொள்வதற்கும் அவர்களின் பணி நிலைமைகள் மற்றும் தேவைகளைப் புரிந்து கொள்வதற்கும் பிஏசி லடாக் செக்டருக்கு செல்ல அப்போது பரிந்துரைக்கப்பட்டது.

இக்குழு தற்போது கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் (சிஏஜி) சமீபத்திய அறிக்கையை ஆராய்ந்து வருகிறது. இது உயரமான இடங்களில் அணியும் ஆடை மற்றும் உபகரணங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் படையினருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியது.

செப்டம்பர் 6’ம் தேதி நடந்த கூட்டத்தில் பாதுகாப்பு படைகளின் தலைவர் (சிடிஎஸ்) ஜெனரல் பிபின் ராவத்துடன் ரேஷன் மற்றும் ஆடை தொடர்பான சில பிரச்சினைகள் குறித்து பிஏசி விவாதித்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில், பிஏசி தலைவர் சி.டி.எஸ்ஸை லடாக் செக்டருக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சுற்றுப்பயணத்தை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து சவுத்ரி பிர்லாவுக்கு கடிதம் எழுதினார். பிஏசி அதன் பயணத்தை இறுதி செய்ய அக்டோபர் 23 அன்று சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தின் போது எம்.பி.க்களுக்கு மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகளால் கள நிலவரம் குறித்து விளக்கப்படலாம். 

பிஏசி அரசாங்கத்தின் ஒதுக்கீட்டு கணக்குகள் மற்றும் சிஏஜி தயாரித்த அறிக்கைகளை ஆராய்கிறது. கிழக்கு லடாக் பகுதியில் இந்திய மற்றும் சீனப் படைகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், பிஏசியின் லே பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

Views: - 42

0

0