PK வேணுமா…? வேணாமா…? காங்கிரசில் வீசும் புதிய சூறாவளி…! உச்சகட்ட குழப்பத்தில் சோனியா, ராகுல்!!!

Author: Babu Lakshmanan
17 September 2021, 3:57 pm
Congress - pk - updatenews360
Quick Share

2021 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் திமுகவுக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்த வியூகங்கள் வெற்றியை தந்ததால், தேசிய அளவில் அவருக்கு சில கட்சிகள் முதல் மரியாதை கொடுக்கத் தொடங்கின. அவருடைய மேஜிக் வியூகங்களில் தற்போது காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் மயங்கிப்போய் உள்ளன.

வியூகம் வகுப்பதில் கெட்டிக்காரர்

பிரசாந்த் கிஷோருக்கும் அரசியல் ஆசை நிறையவே இருக்கிறது. ஆனால் தனக்கு தேசிய அளவில் நல்லதொரு ‘என்ட்ரி’ கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

அதனால்தான் கடந்த 4 மாதங்களாக மும்பை, டெல்லி, கொல்கத்தா என்று மாறி மாறி பறந்து
சரத்பவார், சோனியா, ராகுல், மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்து பேசியும் வருகிறார்.

கொரோனா பரவல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் உச்சம் பெற்றபோது நிலவிய ஆக்ஜிசன் தட்டுபாடு பற்றியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குறித்தும் சர்வதேச அளவில் பரபரப்பு செய்திகள் வெளியானது.

அப்போது பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை எப்படி விமர்சிக்கவேண்டும், பிரச்சனைகளை சமூக வலைத்தளங்களில் எப்படி பரபரப்புடன் பெரிதாக்கவேண்டும்
என்று காங்கிரசுக்கு டூல் கிட் ஒன்றையும் அவர் தயாரித்து கொடுத்ததாக டெல்லி அரசியலில் இன்றளவும் பரபரப்பு பேச்சு உள்ளது.

அரசியல் தலைவர்களின் போன்களை ஒட்டு கேட்ட விவகாரத்தில் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்குவது, டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போட்ட போராட்டத்தை 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை நீட்டிக்க வைப்பது, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவது என பல திட்டங்களை காங்கிரசுக்கு வகுத்துக் கொடுத்ததும் பிரசாந்த் கிஷோர்தான் என்கிறார்கள்.

சோனியாவுக்கு அழுத்தம்

இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் சிலர் அவரை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கடந்த சில வாரங்களாக சோனியாவுக்கும், ராகுலுக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இப்போதே அவரை கட்சியில் சேர்த்தால்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை வீழ்த்துவதற்கு சரியான அரசியல் வியூகங்களை வகுக்க முடியும், எனவே கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சவேண்டும் என்பது அவர்களின் வாதமாக உள்ளது. அதனால் கட்சியின் துணைத் தலைவர் அல்லது அதிகாரம் மிக்க பொதுச் செயலாளர் பதவியை அவருக்கு வழங்கவேண்டும் என்றும் அந்த தலைவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Sonia_Gandhi_UpdateNews360

அதேநேரம் காங்கிரசின் இளம் தலைவர்கள் சிலர் கூறும்போது, “காங்கிரசுக்கு புதிதாக எந்த நிர்வாகிகளும் தேவையில்லை. கட்சியில் இருக்கும் இளம் தலைவர்களுக்கு முக்கிய பதவிகளை கொடுத்தாலே போதும். தற்போது கட்சியில் மூத்த தலைவர்களாக உள்ள ப. சிதம்பரம், அசோக் கெலாட், கமல்நாத், சித்தராமையா, உம்மன் சாண்டி போன்றோர் தங்களது மாநிலங்களில் அடுத்த தலைமுறை தலைவர்களை வளரவிடாமல் ‘செக்’ வைக்கிறார்கள். அல்லது தங்களுக்கு கைப்பாவையாக செயல்படுபவர்களை மட்டுமே வளர்த்து விடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இவர்களில் சிலர் களத்திற்கு நேரடியாக சென்று கட்சிக்காக உருப்படியாக எந்த வேலையும் செய்வதில்லை. அப்படியே நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் யாராவது தங்களை பற்றி நேரடியாக விமர்சனம் செய்தால் அதுபற்றி கட்சி மேலிடத்திடம் இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி கட்டம் கட்டி விடுகிறார்கள்.

ராகுல் மீது நம்பிக்கையில்லை

பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு வெளியே இருந்து அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் எந்தத் தவறும் கிடையாது. ஆனால் நேரடி அரசியலில் போதிய அனுபவம் இல்லாத அவரை காங்கிரசுக்குள் கொண்டுவந்து உயர் பதவி கொடுக்க வேண்டும் என்று கூறுவது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல் ஆகும்.

ஏனென்றால் பீகாரில், நிதிஷ் குமாரை வீழ்த்துவதற்காக அரசியல் விழிப்புணர்வு இயக்கம் ஒன்றையும் 2020-ல் அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பிரசாந்த் கிஷோர் தொடங்கினார். பாஜகவுக்கும், ஐக்கிய ஜனதா தளத்துக்கும் சவாலும் விடுத்தார். ஆனால் தேர்தல் நடந்தபோது ‘கப்சிப்’ ஆகிவிட்டார். மேலும் நிதிஷ் குமாரை வீழ்த்த அவர் ஏவிய ரகசிய அஸ்திரங்கள் எல்லாமே புஸ்வாணம் ஆகிப்போனது.

rahul_gandhi_updatenews360

சோனியா, ராகுல், பிரியங்கா மீது நம்பிக்கை வைக்காமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.
காங்கிரஸ் 2-வது இடத்தில் உள்ள மாநிலங்களில் அதை முதல் இடத்திற்கும், மூன்றாம் இடத்தில் இருக்கும் மாநிலங்களில் 2-வது இடத்திற்கும் கொண்டு வர நடவடிக்கை எடுத்தாலே 2004, 2009 நாடாளுமன்றத் தேர்தல்களின்போது இருந்த நிலைமைக்கு கட்சி வந்துவிடும்.

பல மாநிலங்களில் காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளிடம் அடிமைபோல் நீண்ட காலமாக
சேவகம் செய்து வருகிறது. முதலில் அதை தடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாநிலங்களில் கட்சியை வளர்த்தெடுக்க முடியும்.

குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஒரு மாநில கட்சியின் தலைவர், தற்போது தன்னை தேசிய அரசியலை நோக்கி வேகமாக முன்னெடுத்து வருகிறார். அவர்தான் நாட்டின் அடுத்த பிரதமர் என்றும் கூட சிலர் ஆரூடம் கூறத்தொடங்கி விட்டனர்.

ஆனால் அம் மாநில காங்கிரஸ் தலைமையோ அதைப் புரிந்து கொள்ளாமல் அந்த கட்சிக்கு இன்னும் வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது.

பிரசாந்த் கிஷோரின் அரசியல் வியூகங்கள் மாநில அரசுக்கு வேண்டுமென்றால் பொருத்தமாக இருக்கலாம். தேசிய அரசியலுக்கு அது சரிப்பட்டு வருமா? என்பதை யோசிக்க வேண்டும். எனவே இதில் விஷப்பரீட்சை கூடாது” என்று அவர்கள் எதிர் வாதங்களை வைத்து பிரசாந்த் கிஷோருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

பிரியங்காவுக்கு முக்கியத்துவம்

இவர்களின் இந்த குழப்பத்திற்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்துக் கொண்டு உயர் பதவி கொடுத்தால் மோடிக்கு எதிராக பிரியங்காவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்று நிபந்தனை விதிப்பார் என்பதுதான் அது. இவ்வளவு காலமாக ராகுலை பிரதமர் வேட்பாளராக கூறிவிட்டு திடீரென அதில் மாற்றம் செய்ய சோனியா தயங்குகிறார் என்பதும் உண்மை.

priyanka gandhi - updatenews360

அதேநேரம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் மூடுவிழா நடத்தவேண்டிய நெருக்கடியான நிலைக்கு கட்சி தள்ளப்படும் என்பதால் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்க்கலாமா? வேண்டாமா?… என்கிற உச்ச கட்ட குழப்பத்திற்கு காங்கிரஸ் மேலிடம் தள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சோனியாவும், ராகுலும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 214

0

0