சபையில் அநாகரீகம்..! திருச்சி சிவா உள்ளிட்ட எம்பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை..! வெங்கையா நாயுடு முடிவு..?

20 September 2020, 5:10 pm
parliament_ruckus_updatenews360
Quick Share

விவசாய மசோதாக்கள் தொடர்பாக மேலவையில் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது துணை ஜனாதிபதியும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் மத்தியில், விவசாயிகளின் வாழ்வை முன்னேற்ற மத்திய அரசு இரண்டு முக்கிய சீர்திருத்தங்களை இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், காங்கிரஸ் எம்.பி. ரிபுன் போரா, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் திமுக எம்.பி. திருச்சி சிவா ஆகியோர் அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷின் மைக்கை பிடுங்கி மசோதாக்களைக் கிழித்து எறிந்து அநாகரீகமாக நடந்து கொண்டனர்.

சபையில் முரட்டுத்தனமாக உறுப்பினர்கள் நடந்து கொண்டதால் ராஜ்யசபாவின் நடவடிக்கை 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. பின்னர், விவசாய மசோதாக்கள் இறுதியாக நிறைவேற்றப்பட்டன.

இந்த சம்பவத்தில் மாநிலங்களவை தலைவர் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும், அவர் சபையில் முரட்டுத்தனத்தை உருவாக்கி, அவைத்தலைவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு, காகிதங்களையும் கிழித்து எறிந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்த விதம் மற்றும் மாநிலங்களவையின் நடவடிக்கைகளை நிறுத்த முயன்றது போன்றவற்றில் பாஜகவும் அதிருப்தி அடைந்துள்ளது. பாராளுமன்றத்தில் நடந்துகொண்ட அந்த எம்.பி.க்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல பாஜக எம்.பி.க்களும் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

இதனால் விரைவில் சபையில் அநாகரீகமாக நடந்து கொண்ட எம்பிக்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 6

0

0