151 ஆறுகள், 3 கடல்கள்..! ராமர் கோவிலுக்காக புனித நீர்..! 50 வருடங்களாக சேகரிக்கும் சகோதர்கள்..!

3 August 2020, 10:59 am
Ram_Temple_Update
Quick Share

ஆகஸ்ட் 5’ஆம் தேதி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன்னதாக, 70 வயதைக் கடந்த இரு சகோதரர்கள், நாடு முழுவதும் உள்ள 151 ஆறுகள் மற்றும் 3 கடல்களில் இருந்து தண்ணீரை சேகரித்து, இப்போது ராமர் கோவிலின் பூமி பூஜைக்கு முன்னால் அயோத்திக்கு கொண்டு வந்துள்ளனர். 

ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதே ஷியாம் பாண்டே மற்றும் பண்டிட் திரிபாலா ஆகியோர் 1968 முதல் இந்திய நதிகள் மற்றும் கடல்களிலிருந்தும், இலங்கையின் 16 இடங்களிலிருந்து மண்ணை சேகரித்து வருகின்றனர்.

“ராமர் கோவில் கட்டப்படும் சமயத்தில் , இந்தியா முழுவதும் உள்ள ஆறுகளிலிருந்தும், இலங்கையிலிருந்து மண்ணும், புனித நீரையும் பரிசளிக்க வேண்டும் என்பது எங்கள் கனவாக இருந்தது. இலங்கையின் 16 இடங்கள் உள்பட 151 ஆறுகள், மூன்று கடல்கள் மற்றும் மண்ணையும் தண்ணீரையும் சேகரித்தோம்.” என ராதே ஷியாம் பாண்டே கூறினார். 1968 முதல் 2019 வரை, சகோதரர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள், ரயில் மற்றும் விமானத்தில் இதற்காக பயணிக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். புனிதர்கள் மற்றும் பார்வையாளர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகள் கலந்து கொள்ளக் கூடிய இந்த விழாவுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

முன்னதாக ராமர் கோவில் கட்டுவதற்காக அயோத்தியில் உள்ள இடத்தை ஒப்படைக்குமாறு மத்திய அரசுக்கு 2019 நவம்பர் 9 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.