ரூ.10 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றி சென்ற லாரி கடத்தல்!
26 August 2020, 6:31 pmஆந்திரா : காஞ்சிபுரத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்போன் ஏற்றி சென்ற லாரியை கடத்திய கொள்ளையர்கள் லாரியில் இருந்த செல்போன்களை வேறு லாரியில் ஏற்றி தப்பிச்சென்றனர்.
காஞ்சிபுரத்தில் பிரபல தனியார் செல்போன் தயாரிப்பு நிறுவன கிடங்கிலிருந்து சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை ஏற்றி கொண்டு நேற்று நள்ளிரவுக்கு மேல் லாரி ஒன்று ஆந்திராவுக்கு புறப்பட்டு சென்றது.
நடுவழியில் பயணிகள் போல் லாரியை தடுத்து நிறுத்திய சிலர் அதில் ஏறி கொண்டனர். பின்னர் லாரி டிரைவர், கிளீனர் ஆகியோரை தாக்கி கீழே தள்ளி விட்டு லாரியுடன் அவர்கள் தப்பி சென்றனர். இதுபற்றி லாரியின் டிரைவர், கிளீனர் ஆகியோர் அளித்த தகவலின்பேரில் போலீசார் கடத்தப்பட்ட லாரியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆந்திரா, தமிழ்நாடு மாநில எல்லையில் இருக்கும் நகரி அருகே முட்புதர் ஒன்றில் கடத்தப்பட்ட லாரி இருப்பது பற்றிய தகவல் நகரி போலீசாருக்கு கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் பார்த்தபோது லாரியில் ஏற்றப்பட்டு இருந்து செல்போன்களில் பெரும்பாலானவற்றை காணவில்லை.
எனவே லாரியை கடத்தியவர்கள் அதிலிருந்து செல்போன்களை வேறு லாரியில் ஏற்றி தப்பி சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காஞ்சிபுரம்,நகரி இடையே உள்ள சோதனை சாவடிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள் மூலம் செல்போன் லோடு ஏற்றப்பட்ட லாரியை கடத்தியவர்கள் யார், லாரியை கைவிட்டு சென்ற கடத்தல்காரர்கள் அதில் இருந்த செல்போன்களை எந்த வகையான வாகனத்தில் ஏற்றி சென்றார்கள் என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் கடத்தப்பட்ட லாரியின் டிரைவர்,கிளீனர் ஆகியோருக்கு தொடர்புகள் இருக்குமோ என்ற சந்தேகத்திலும் விசாரணை நடைபெறுகிறது.