மும்பை சிறுவனின் மின்னல் வேக ரூபிக் கியூப்! ஆச்சரியத்துடன் சச்சின் பதிவிட்ட வீடியோ வைரல்

3 March 2021, 8:18 am
Quick Share

சச்சின் தெண்டுல்கர் முன்னிலையில், மும்பை சிறுவன் ஒருவன் ரூபிக் கியூப்பை பார்க்காமலேயே, அதன் அனைத்து வண்ணங்களையும் ஒன்றாக கொண்டு வந்து சாதனை படைக்க, அந்த வீடியோவை சச்சின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். ஒருநாளில் இந்த வீடியோ 2 மில்லியன் வியூவ்ஸ்களை குவித்து வைரலாகி உள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முன்னிலையில், மும்பையைச் சேர்ந்த ஒரு சிறுவன் ரூபிக் கியூப்பை பார்க்காமல் தீர்வு செய்தார். இன்ஸ்டாகிராமில் சச்சின் தனது பக்கத்தில் இந்த வீடியோவை பதிவு செய்தார். முகமது அய்மன் கோலி என்ற அந்த சிறுவன் நிகழ்த்திய சாதனையை கண்டு நெட்டிசன்கள் வாய் பிளந்தனர்.

வீடியோவில் முதலில் தோன்றும் சச்சின், செல்பி மோடில் வீடியோ எடுத்து கொண்டே, பின்னால் நின்றிருந்த கோலியை காட்டி, இந்த சிறுவனை நான் சிறிது நேரத்திற்கு முன்பு தான் சந்தித்தேன். அவர் பார்க்காமல் செய்யும் வேலையை, நம்மில் பலர் பார்த்து கொண்டே கூட செய்ய முடியாது என்கிறார். தொடர்ந்து கியூப்பை சச்சின் கோலியிடம் தந்து, சவால் விடுக்கிறார். சவாலை ஏற்ற அந்த சிறுவன், தலைக்கு மேல் கியூப்பை வைத்து கொண்டு, அதனை பார்க்கமலேயே 17 வினாடிகளை அனைத்து வண்ணங்களையும் ஒரே பக்கம் கொண்டு வந்து சேர்ந்து விடுகிறார்.

அங்கிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவிக்க, சச்சினும் ஆச்சரியம் அடைகிறார். வீடியோவில், கோலி உலக சாதனை படைத்தவர் என கூறுகிறார். அவரது அடுத்த சவால் எனக்கு இதனை சொல்லி கொடுப்பது தான் எனக் கூறி வீடியோவை முடிக்கிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ஒரு நாட்களுக்கு முன்னதாகவே 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று வைரல் ஆகி உள்ளது.

Views: - 55

0

0