“தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை”..! பொங்கலுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..!

14 January 2021, 10:38 am
Modi_Pongal_UpdateNews360
Quick Share

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று, தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது என பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார்.

தமிழர் வாழ்வியலில் மிக முக்கியத் திருவிழாவாக பொங்கல் பண்டிகை உள்ளது. அறுவடைத் திருவிழாவான இது, ஒரே நாளில் முடிவடையும் திருவிழாவல்ல.

தை மாதத்தின் முதல் நாளான இன்று பொங்கல் விழாவாகவும், தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலாகவும், தை மூன்றாம் நாள் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது.

மேலும் தை மாதம் நான்காம் தேதி உலகப் பொதுமைறையை உலகுக்கு அளித்த திருவள்ளுவரின் நினைவாக திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களாலும் இந்த பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் தலைவர்கள் அனைவரும் தமிழர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்.” என தமிழிலேயே வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதே போல் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட இதர தலைவர்களும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply