தக்காளி விலை உயர்வால் பறி போன உயிர்.. பல லட்சம் லாபம் ஈட்டிய விவசாயிக்கு நேர்ந்த கொடூரம் : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2023, 2:31 pm
Farmer Murder - Updatenews360
Quick Share

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை ரூ.100 முதல் ரூ.160 வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. எனினும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரூ.180 முதல் ரூ.250 வரை தக்காளி விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த தக்காளி விலை உயர்வால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகள் தக்காளியை பதுக்கி வைத்து, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும் தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே தக்காளி திருட்டு சம்பவங்களும் பல இடங்களில் அரங்கேறி வருகின்றன. மேலும் சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் தக்காளி வியாபாரி ஒருவர், பாதுகாப்புக்கு பவுன்சர்களை நிறுத்தி இருந்துது சர்ச்சையானது.

இந்த நிலையில் ஆந்திராவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. தக்காளி விவசாயி ஒருவர் வியாபாரத்தில் அதிக வருமான ஈட்டியதால், கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் மதனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. விவசாயம் செய்து வரும் தனது தோட்டத்தில் சமீபத்தில் தக்காளி பயிரிட்டு அறுவடை செய்துள்ளார்.

தற்போதைய தக்காளி விலை உயர்வால் அவர் 20 நாட்களில் 30 லட்சம் வரை லாபம் ஈட்டி உள்ளார். மேலும் தனது தோட்டத்திலேயே தங்கி தக்காளியை பாதுகாத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ராஜசேகர் ரெட்டி தனது தோட்டத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ராஜசேகரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தக்காளி விற்பனை மூலம் ராஜசேகர் ரெட்டி சம்பாதித்த பணத்தை கொள்ளை அடிக்கவே அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு அவர் கிராமத்திற்கு பால் விநியோகிக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து மரத்தில் கட்டி வைத்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஊரக வட்ட ஆய்வாளர் சத்தியநாராயணா கூறுகையில், பாதிக்கப்பட்டவரின் கால்கள் மற்றும் கைகளை கட்டி, கழுத்தில் துண்டுகள் கட்டி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.

ராஜசேகர் ரெட்டிக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தக்காளி விவசாயி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 236

0

0