ஹெலிகாப்டர் விபத்தில் நடந்தது என்ன…? முப்படைகளின் விசாரணைக்குழு அறிக்கை…!

Author: Udhayakumar Raman
14 January 2022, 10:05 pm
Quick Share

டெல்லி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்த அறிக்கையை முப்படைகளின் விசாரணைக்குழு சமர்ப்பித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங்கும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணமா அல்லது சதிச் செயலா? என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க முப்படைகளின் தரப்பில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவினர், நீலகிரி மாவட்டம் குன்னூரில் விபத்து நிகழ்ந்த காட்டேரி மலைப்பாதையில் நேரில் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்தக் குழு தனது விசாரணையை நிறைவு செய்து சமீபத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த நிலையில், முப்படை குழு விசாரணை அறிக்கையின் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஹெலிகாப்டர் விபத்திற்கு கவனக்குறைவோ அல்லது இயந்திரத்தின் கோளாறோ காரணம் அல்ல எனவும், ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் மேக மூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததால் தான் இந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Views: - 194

0

0