தமிழ்நாட்டுக் கோவிலில் கடத்தப்பட்ட பழங்காலத்து ராமர் சிலை..! பிரிட்டனிடமிருந்து மீட்டது மத்திய அரசு..!
16 September 2020, 9:24 amபிரிட்டன் அதிகாரிகள் 15’ஆம் நூற்றாண்டின் பகவான் ராமர், சீதை மற்றும் லட்சுமணன் சிலைகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக கலாச்சார அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் இன்று உறுதிப்படுத்தினார்.
ஊடகங்களுடன் பேசிய படேல், மூன்று சிலைகளும் இந்தியாவுக்கு சொந்தமானவை என்றும், 1978’ல் தமிழ்நாட்டின் கோவிலில் இருந்து திருடப்பட்டதாகவும் உறுதிப்படுத்தினார். இந்த சிலைகள் 15’ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவை என்று அவர் கூறினார்.
இதேபோன்ற இரண்டு சிலைகளையும் ஒரு தூணையும் இங்கிலாந்து அதிகாரிகள் சமீப காலங்களில் ஒப்படைத்துள்ளனர் என்று படேல் மேலும் கூறினார். சிலைகள் திரும்புவதை உறுதி செய்த இங்கிலாந்து அரசு மற்றும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக மோடி அரசாங்கத்தின் சாதனைகள் குறித்து பேசிய மத்திய அமைச்சர், இதுபோன்ற 40’க்கும் மேற்பட்ட இழந்த தொல்பொருட்களை இந்திய அரசு 2014 முதல் மீண்டு கொண்டு வருகிறது என்றார்.
எனினும், சுதந்திரம் பெற்றதிலிருந்து 2013 வரை 13 கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருட்கள் மட்டுமே இந்திய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போதைய மோடி அரசு 40’க்கும் மேற்பட்ட தொல்பொருட்களை வெளிநாடுகளிலிருந்து மீட்டுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.