கட்டுக்கடங்காத கனமழை… உள்துறை அமைச்சர் வீட்டையும் விட்டு வைக்காத வெள்ளம் : வெளியே வர முடியாமல் தவிக்கும் குடும்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2023, 9:59 pm
Minister Home Flood - Updatenews360
Quick Share

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தற்போது பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, இமாச்சல பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்கிறது. இதனால் பொதுமக்கள் யமுனை ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. அதோடு வெள்ள பாதிப்பு பகுதிகளில் வசித்த 30,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் வெள்ள பாதிப்பு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இமாச்சல பிரதேச மாநிலத்திலும் கனமழை கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்து வருகிறது.

குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள், கால்நடைகள் அடித்து செல்லப்பட்டன. தற்போதைய நிலவரப்படி இமாச்சல பிரதேசத்தில் கனமழை வெள்ளம் காரணமாக தற்போது வரை 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 16 பேர் மாயமாகி உள்ளதாகவும், 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வெள்ளத்தால் 492 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பல ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்கள் உதவி செய்வதாக அறிவித்துள்ளன. அதேபோல் தான் ஹரியானா மாநிலத்தையும் தற்போதைய மழை விட்டு வைக்கவில்லை.

ஹரியானாவில் உள்ள முக்கிய நகரான அம்பாலா உள்பட பல இடங்களில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இன்று வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இதனால் அம்பாலாவில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். இந்த மழை வெள்ளம் அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜின் வீட்டையும் விட்டு வைக்கவில்லை.

அம்பாலாவில் உள்ள அவரது வீட்டையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கிடையே உள்துறை அமைச்சர் அனில் விஜ் படகு மூலம் வெள்ள பாதிப்பு பகுதிகளை இன்று ஆய்வு செய்தார்.

மேலும் மீட்பு பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் படகில் சென்று பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர்.

மேலும் மழை வெள்ள பாதிப்பு இன்னும் குறையவில்லை. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என ஹரியானா அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 249

0

0