மீண்டும் மக்களவையில் ஒலித்த ‘திருக்குறள்’: அரசுடன் ஒப்பிட்டு நிர்மலா சீதாராமன் உரை..!!

1 February 2021, 1:30 pm
nirmala thirukural - updatenews360
Quick Share

புதுடெல்லி: 2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘திருக்குறள்களை’ மேற்கோள்காட்டி உரையாற்றினார்.

கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு மிகுந்த பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். நாடு சுதந்திரமடைந்ததற்கு பிறகு முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3வது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

அப்போது நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 9.50 சதவீதமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிர்மலா சீதராமன், சந்தைகளில் இருந்து பல லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையில், ‘இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

பொருள் வரும் வழிகளை உருவாக்குவது, வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு என்பதே இந்த குறளின் பொருள் ஆகும். திருவள்ளுவரின் குறளுக்கு இணங்கவே மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து என்ற குறளையும் அவர் மேற்கோள்காட்டினார். ‛நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு,’ என்பதே இதன் விளக்கமாகும். அவரின் தமிழ் ஆர்வம் இந்த நிதியாண்டு பட்ஜெட்டிலும் வெளிப்பட்டுள்ளது.

Views: - 25

0

0