மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி..! மருத்துவமனையில் அனுமதி..!

4 August 2020, 7:53 pm
dharmendra_pradhan_updatenews360
Quick Share

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மேதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக அவரது அமைச்சக அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து பிரதான் தனிமையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

51 வயதான மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளான இந்தியாவின் இரண்டாவது மத்திய அமைச்சர் ஆவார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியுரப்பா மற்றும் முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட முக்கியத் தலைவர்கள் ஆவர். 

மேலும் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்துக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தனியாருக்குச் சொந்தமான காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் உள்ள மற்றொரு அமைச்சருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.