2 குழந்தைகள் தான் லிமிட்…மீறினால் அரசு மானியம், வேலை கிடையாது: புதிய சட்டத்தை அறிவித்தது உ.பி. அரசு..!!

10 July 2021, 5:00 pm
Quick Share

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில அரசு புதிய வரைவு சட்டத்தை வெளியிட்டுள்ளது.

‛உத்தரபிரதேச மக்கள் தொகை மசோதா 2021’ஐ அம்மாநில சட்ட கமிஷன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த மசோதா குறித்து கருத்து தெரிவிக்கலாம் எனவும், அதற்கு ஜூலை 19 ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டு உள்ளதாவது, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் கிடையாது. 2 குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு, அவர்களது பணிக்காலத்தில் கூடுதலாக 2 இன்க்ரிமென்ட் வழங்கப்படும். அல்லது பேறு கால விடுமுறை 12 மாதம் முழு சம்பளத்துடன் வழங்கப்படும்.

தேசிய பென்சன் திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பில் கூடுதலாக 3 சதவீத படி உயர்த்தி தரப்படும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மையங்கள் அமைக்க வேண்டும். இந்த மையங்கள் மற்றும் தொண்டு நிறுவனஙகள் இணைந்து கருத்தடை மாத்திரை, காண்டம்கள் உள்ளிட்டவற்றை விநியோகம் செய்வதுடன், குடும்ப கட்டுப்பாடு முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கர்ப்பிணிகள், குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து உயர்நிலை வகுப்பில் பாடம் ஒன்றை சேர்க்க வேண்டும். இவ்வாறு அந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.

Views: - 162

0

0