சாதி, மத கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்க ₹50,000 உதவித்தொகை..! உத்தரகண்ட் பாஜக அரசின் சிறப்புத் திட்டம்..!

21 November 2020, 10:03 pm
Marriage_UpdateNews360
Quick Share

திருமணத்தின் பெயரில் பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகும் நிலையில் அதற்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்ற பல பாஜக ஆளும் மாநிலங்கள் திட்டமிட்டுள்ள நிலையில், பாஜக ஆட்சி நடக்கும் உத்தரகண்டில், அம்மாநில அரசு இத்தகைய திருமணங்களை ஊக்குவிக்க சாதி மற்றும் மதங்களுக்கு இடையிலான கலப்புத் திருமணம் மேற்கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ 50,000 உதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட கலப்புத் திருமண தம்பதிகளுக்கு இந்த பண ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்று மாநில சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாதியினருக்கு இடையிலான திருமணங்களில், பண ஊக்கத்தொகையைப் பெறுவதற்கான ஒரு நிபந்தனையாக, அரசியலமைப்பின் 341’வது பிரிவின்படி வரையறுக்கப்பட்டுள்ளபடி, வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் பட்டியலின சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

தேசிய ஒற்றுமையின் உணர்வை வளர்ப்பதற்கு சாதி மற்றும் மதங்களுக்கு இடையேயான கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று தெஹ்ரியின் சமூக நல அலுவலர் தீபங்கர் கில்டியால் கூறினார்.

தகுதியான தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு ஒரு வருடம் வரை பண ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அவர் மேலும் கூறினார். 

முன்னர் ரூ 10,000 நிதியுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2014’ஆம் ஆண்டில் ரூ 50,000’ஆகா உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு புறம் லவ் ஜிகாத் என திருமணத்திற்காக மதமாற்றம் மேற்கொள்வதை தடை செய்ய பாஜக ஆளும் மாநிலங்கள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், பாஜக ஆளும் உத்தரகண்டில் மத ரீதியிலான கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்க நிதியுதவி வழங்கப்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Views: - 19

0

0