உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

Author: Rajesh
10 February 2022, 8:31 am
Quick Share

லக்னோ: உத்தரபிரதேச சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தலில் வாக்கு பதிவு இன்று தொடங்கியுள்ளது.

பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று நடைபெறுகிறது. 11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன.

623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் அமைச்சர்கள் ஆவர். 2 கோடியே 27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 25 ஆயிரத்து 849 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட தேர்தல் நடக்கும் 58 தொகுதிகளில் 53 தொகுதிகள் பாஜக வசம் உள்ளவை.

தலா 2 தொகுதிகள், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வசம் உள்ளவை. ஒரு தொகுதி, ராஷ்டிரீய லோக்தளம் வெற்றி பெற்ற இடமாகும். தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பதற்றமான பகுதிகளில் மத்திய படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வாக்காளர்கள் காலையிலேயே வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

Views: - 883

0

0