மும்பையை மிரட்டும் மழை…! 2 நாட்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை

4 August 2020, 12:13 pm
Mumbai rain - updatenews360
Quick Share

மும்பை: இடைவிடாத மழை காரணமாக மும்பை மக்கள் 2 நாட்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

வட மாநிலங்களில் சில வாரங்களாக இடைவிடாத மழை பெய்து வருகிறது. அசாம் கனமழை மற்றும் வெள்ளத்தில் மிதக்கிறது. பீகாரிலும் பலத்த மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தொடரும் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை மொத்தமாக புரட்டு போட்டுள்ளது. குறிப்பாக மும்பையில் பெய்து வரும் கனமழையால் பெரும் அச்சம் நிலவுகிறது.

அங்கு 2 நாட்கள் கடுமையான மழைபொழிவு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆகையால் இந்த நாட்களில் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மழையானது ஆகஸ்ட் 6ம் தேதிக்கு பின்னர் தான் குறைய தொடங்கும். எனவே இந்த 2 நாட்களில் அதிக மழைபொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 6ம் தேதிக்கு பின்னர் மழை குறைய தொடங்கினாலும் மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இப்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை 2 நாள் நீடிக்கும். அதன் பிறகே நிலைமை சீரடையுமா? இல்லையா என்பதை கூற முடியும் என்றும் வானிலை மையம் கூறி உள்ளது.

பொதுமக்களை மட்டுமல்லாது மீனவர்களுக்கும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வங்கக்கடலில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கூறி உள்ளது.

மும்பை நகரம் தவிர, அண்டை மாநிலங்களில் மழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டு உள்ளது. மத்திய பிரதேசம், டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது, ஆகையால் அந்த மாநில மக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

Views: - 7

0

0