கொரோனா தொற்று அச்சம்: சாலையில் மயங்கி விழுந்து இறந்த பெண்…ஜேசிபி எந்திரத்தில் தூக்கிச் சென்ற அவலம்..!!

4 May 2021, 5:51 pm
karnataka jcp - updatenews360
Quick Share

கர்நாடகா: சாலையில் மயங்கி விழுந்து இறந்த பெண்ணின் உடலை கொரோனா பயத்தால் மண் அள்ளும் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் தூக்கிச்சென்ற அவலம் கர்நாடாகாவில் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா குரதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகலா. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துபோனார். இதனால் தனது குழந்தைகளுடன் சிந்தாமணியில் சந்திரகலா தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சந்திரகலா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையும் பெற்றார். ஆனாலும் அவருக்கு உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து அவர், சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று சந்திரகலா சிந்தாமணியில் இருந்து குரதஹள்ளி கிராமத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அப்போது அதை பார்த்த அந்த ஊர் மக்கள், ஒருவேளை அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற பயத்தால் யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை. சிறிதுநேரத்திலேயே சந்திரகலா இறந்து விட்டார்.

இதையடுத்து பெண்ணின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அங்கிருந்தவர்களிடம் வாகனம் கேட்டதற்கு, அப்போதும் எவரும் உதவி செய்ய முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு மண் அள்ளும் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. இறந்த சந்திரகலாவின் உடலை பொக்லைன் எந்திரத்தில் எடுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 103

0

0