தனியாக அறை எடுத்து தங்கும் கல்லூரி மாணவர்களே உஷார்.. அறைகளை நோட்டமிடும் கும்பல் : செல்போன் திருட்டில் ஈடுபட்ட கேரள நபர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2022, 4:33 pm
Hostel Boys Cellphon theft -Updatenews360
Quick Share

கோவை : கல்லூரி மாணவர்களின் அறைகளை குறி வைத்து செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கேரள நபரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட் தர்மா (வயது 21). இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

மேலும் ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் தனியாக அறையெடுத்து தனது நண்பர்களான சல்மான், ஆகாஸ், மாறன், ஜெஸ்வந்த், சாம்வேல், தியாகு உள்ளிட்டோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அறையில் இருந்த அனைவரும் தூங்கிய நிலையில், மறுநாள் அதிகாலை பார்த்த போது அறையில் இருந்த ரூ.1.66 லட்சம் மதிப்பிளான 5 செல்போன்கள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து ரிச்சர்ட் தர்மா செட்டிபாளையம் போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மாணவர் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர், ரிச்சர்ட் தர்மாவின் அறையில் இருந்து செல்போன்களை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

மேலும் இதே போல் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் அடிக்கடி செல்போன் திருட்டு போனதாக புகார்கள் வந்திருந்ததால், செட்டிபாளையம் போலீஸார் தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் செல்போன் சிக்னலை வைத்து, தலைமறைவாக இருந்த மர்ம நபரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணை பிடிப்பட்ட நபர் கேரளா மாநிலத்தை சேர்ந்த கிரீஸ் (வயது 44) என்பதும், இவர் கோவையில் கிடைக்கும் வேலைகளை பார்த்துக் கொண்டே கல்லூரி மாணவர்களின் விடுதிக்குச் சென்று திறந்து இருக்கும் அறைகளுக்குள் புகுந்து செல்போன் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், செல்போன்களை பறிமுதல் செய்து, அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 490

0

0