ம.பி.-க்கு போனாலும் என்னை பற்றிதான் பிரதமர் பேச்சு… நான் பெரியாரின் கொள்கை வாரிசு ; அமைச்சர் உதயநிதி பரபர பேச்சு..!!

Author: Babu Lakshmanan
4 December 2023, 1:19 pm
Quick Share

மத்திய பிரதேசம் போனால் கூட பிரதமர் என்னைப்பற்றிதான் பேசுகிறார் என்று கரூரில் நடந்த திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சேலம் இளைஞரணி மாநாட்டுக்காக கரூர் மாவட்ட திமுக சார்பில் 1 கோடியே 12 லட்சம் வழங்கியதற்கு அமைச்சர் உதயநிதி நன்றி தெரிவித்தார்.

அப்போது அமைச்சர் உதயநிதி பேசியதாவது :- அமலாக்கத்துறை, ஐ.டி, சி.பி.ஐ என பல பிரச்சனைகளை தாண்டி போராடி வருகிறது கரூர் மாவட்ட திமுக. திமுக இளைஞரணிக்கு வரலாற்று பெருமை உண்டு. இந்தியாவில் இளைஞரணியை உருவாக்கிய முதல் கட்சி திமுகதான்.

மதுரையில் நடந்த அதிமுக மாநாடு எப்படி நடத்த கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு. ஆனால், இப்படி ஒரு மாநாடு நடந்ததில்லை என்ற அளவில் சேலத்தில் நடக்க உள்ள திமுக இளைஞரணி மாநாட்டை மிகப்பெரிய அளவில் சிறப்பாக நாம் நடத்த வேண்டும். கரூர் மாவட்டத்தின் முதல் செயல்வீரர் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவர் இல்லையென்றாலும் இவ்வளவு பிரம்மாண்டமான கூட்டம் நடந்து வருகிறது. அதுதான் அவரின் உழைப்பு.

Udhaya- Udpatenews360

சூழ்ச்சிகளால் சிறைக்குச் சென்ற செந்தில்பாலாஜி மீண்டு வருவார். விரைவில் உங்களை சந்திப்பார். நீட்டுக்கு எதிராக இதுவரை 60 லட்சம் கையெழுத்துகளை பெற்றுள்ளோம். நீட்டுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், மத்திய அரசு விலக்கு அளிக்க மறுக்கிறது.

மத்திய பிரதேசம் போனால் கூட பிரதமர் என்னைப்பற்றிதான் பேசுகிறார். சனாதானம் குறித்து பேசியதற்கு என் தலைக்கு விலை வைத்தார்கள். மன்னிப்பு கேட்க சொன்னார்கள். ஆனால், நான் கேட்க மாட்டேன். வாரிசு அரசியல் செய்வதாக என்னை பற்றி பேசுகிறார்கள். நான் பெரியாரின் கொள்கை வாரிசு. மோடியின் மிக நெருங்கிய நண்பர் அதானி. அதானியின் கையில் அனைத்தையும் தூக்கி கொடுத்து விட்டார் மோடி, எனக் கூறினார்.

இறுதியாக நடிகர் விஜய் ஸ்டைலில் மேடையில் குட்டிக்கதை ஒன்றை கூறிவிட்டு அமைச்சர் உதயநிதி தனது பேச்சை முடித்து கொண்டார்.

Views: - 352

0

0