நீட் தேர்வு விவகாரம்… இப்ப பதில் சொல்ல முடியுமா..? ஆதாரத்தை வெளியிட்டு திமுகவுக்கு சவால் விடுக்கும் அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
5 February 2022, 7:12 pm
annamalai - updatenews360
Quick Share

சென்னை : நீட் தேர்வு அறிமுகப்படுத்திய விவகாரத்தில் திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது மிகவும் பேசு பொருளாக இருப்பது தமிழக அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியதுதான். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதாகவும், இதற்கு காரணம் திமுகவின் மெத்தனப் போக்குதான் என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

Cm stalin -Updatenews360

நீட் தேர்வு விலக்கு விவகாரம் தனது தன்மானப் பிரச்சனையாக பார்க்கும் திமுக, எப்படியாவது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்று போராடி வருகிறது. ஆனால், ஆளுநரின் இந்த செயல், திமுகவின் நடவடிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை நிராகரிக்க ஆளுநர் கூறிய காரணங்களை சரி செய்துவிட்டு, வரும் 8ம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி, மறுபடியும் தீர்மானத்தை கொண்டுவர ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Neet CM And Governor- Updatenews360

இதனிடையே, திமுக, காங்கிரஸ் கட்சிதான் நீட் தேர்வை கொண்டு வந்தது என்றும், தற்போது அவர்களே அதனை எதிர்த்து போராடுவது வேடிக்கையாக இருப்பதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும், நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் நன்மை அடைந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதேவேளையில், கடந்த 2010, டிசம்பர் 21ம் தேதி நீட் மசோதாவை திமுக எம்பி காந்தி செல்வன் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்ததாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆனால், அவர் கூறிய தகவல்கள் தவறானவை, அன்றைய தேதியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நடைபெறவில்லை என்று கூறப்பட்டு வருகிறது. இதனை வைத்து திமுக – பாஜகவினர் வாக்குவாதம் நடத்தி வருகின்றன.

annamalai - Updatenews360

இது ஒருபுறம் இருக்க, பாஜக தலைவர் அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட்டு, நீட் கொண்டு வந்தது யார்..? என்பது குறித்து பேச திமுக தயாரா..? என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அரசாணை மூலமாக நமது புதிய சட்டங்களின் உரை வெளியிடப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. 21 டிசம்பர் 2010, இந்திய மருத்துவக் கவுன்சிலால் நீட் குறித்த அரசாணை முதல் முறையாக வெளியிடப்பட்டது. நீட் என்ற நுழைவுத் தேர்வு முறை நடைமுறைக்கு வந்ததற்கு இந்த அரசாணை தான் அச்சரமாக இருந்தது!

இந்திய மருத்துவ கவுன்சில் சுகாதார அமைச்சகத்திற்குக் கீழே செயல்படுகிறது, இந்த வெளியீட்டிற்கு காரணமாக இருந்தவர் திரு. காந்திசெல்வன், திமுக வை சார்ந்த அப்போதைய மத்திய இணை அமைச்சர்! முன்னாள் அமைச்சர் திரு காந்திசெல்வன் அவர்கள் இது உண்மை இல்லை என்று மறுக்கட்டும்? சவாலுக்கு தயாரா திமுக..?, எனக் குறிப்பிட்டுள்ளார்.

annamalai - stalin - updatenews360

ஏற்கனவே நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் பரிதவித்து வருகிறது. இந்த சூழலில், நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்பது குறித்த விவாதத்தை பாஜக கையில் எடுத்திருப்பது திமுகவுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. பாஜகவின் இந்த சவாலை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்பாரா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

Views: - 1113

2

0