மின்சாரம் தாக்கி செவிலியர் உயிரிழப்பு… சோகத்தில் மருத்துவமனை ஊழியர்கள்…

23 May 2020, 10:11 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மின்சாரம் தாக்கி செவிலியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம்-உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள ராமகிருஷ்ணா பல் மருத்துவமனையில் கொடைக்கானலை சேர்ந்த சந்திரலேகா என்ற செவிலியர் கடந்த ஒரு ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இன்று மாலை அவருடன் பணியாற்றும் இரண்டு செவிலியர்கள் உடன் பல் மருத்துவமனை மொட்டை மாடியில் பேசிக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக மருத்துவமனை வளாத்தின் மொட்டை மாடியில் உள்ள எச்டி லைனில் காற்றின் வேகத்திற்கு மொட்டை மாடியில் உள்ள கிரில் கம்பியுடன் உராய்வு ஏற்பட்டு உள்ளது. அதேசமயம் சந்திரலேகா கிரில் கம்பியில் கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மொட்டை மாடியில் உள்ள கில் கம்பி வழியாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது தோழிகள் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சோதனை செய்தபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.தோழி கண்முன்னே மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதால் தாங்க முடியாத துயரத்தால் கண்ணீர்விட்டு கதறி அழுத சக தோழிகளை பார்த்த மருத்துவமனை வளாகமே சோகமாக காட்சியளித்தது. மேலும் செவிலிய பெண்ணொருவர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் செவிலியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.