ஓசூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் நேரில் ஆய்வு…

16 March 2020, 9:29 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே மாநில எல்லையில் ஜுஜுவாடி பகுதியில் வாகனங்களுக்கு நோய்த்தடுப்பு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார்.

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களிலும் பரவி பொதுமக்களை அச்சுறுத்துகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகஅரசின் அறிவுறுத்தலின்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 22 சினிமா தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அனைத்து தொடக்கப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல மாநில எல்லைகளில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களை நிறுத்தி கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், ஜூஜூவாடி, நல்லூர், கக்கனூர், குமளாபுரம் உள்ளிட்ட 16 இடங்களில் சோதனைச் சாவடிகளில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துத்துறை, காவல்துறை, வனத்துறை, நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஆகிய அரசு துறை அதிகாரிகள் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஓசூர் அருகே மாநில எல்லையில் ஜுஜுவாடி பகுதியில் வாகனங்களுக்கு நோய்த்தடுப்பு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நகர்ப்புறங்கள் மற்றும் கிராம பகுதிகளிலும் பொது மக்கள் எவ்வாறு சுத்தமாக இருக்க வேண்டும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுத்துறை ஊழியர்கள் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.