வழக்கறிஞர் வீட்டில் திடீர் தீ விபத்து: வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து நாசம்…

26 March 2020, 6:55 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஓசூரில் வழக்கறிஞர் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள உமாசங்கர் நகரில் வசித்து வருபவர் வழக்கறிஞர் ஸ்ரீராம். இவரது வீட்டில் கீழ்த்தளம் மேல்தளம் என இரண்டு தளங்கள் உள்ளன. மொத்தம் 7 பேர் வாழ்ந்து வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இன்று ஸ்ரீராம் வீட்டில் உள்ள அனைவருமே தங்களது வீட்டின் கீழ்தளத்தில் இருந்தனர். மேல் தளத்தை இரவு நேரம் தூங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று திடீரென மேல்தள வீட்டில் மின்சார கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென எரிந்த இந்த தீயால் கரும்புகை சூழ்ந்து அப்பகுதி முழுவதுமே பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் கீழ்தளத்தில் இருந்ததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த தீ விபத்தில் மேல் தள வீட்டிலிருந்த பல்வேறு பொருள்கள் எரிந்துள்ளது. இதுகுறித்து நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.