நிலத்தகராறில் மூன்று பேருக்கு உணவில் விஷம் வைத்து கொலை… குற்றவாளிக்கு மூன்று ஆயுள் தண்டனை…

18 March 2020, 8:12 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே நிலத்தகராறில் மூன்று பேருக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து ஒசூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த இராயக்கோட்டை அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமாரன் (35). விவசாயியான இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த முருகன் (40) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. சுகுமாரனின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்து, பழி தீர்த்துக்கொள்ள வேண்டுமென துடித்த முருகன், 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி சுகுமாரனின் குடும்பத்தினர் தயார் செய்திருந்து உணவில் அரளிவிதையை அரைத்து கலந்து வைத்துள்ளனர்.

இதனை அறியத சுகுமாரனின் மகன் ஜீவனந்தம், மகள் பூஜா ஆகியோரும், பக்கத்து வீட்டுக்காரரான முனியப்பா என்கிற முதியவரும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட சிறிது நேரத்திலேயே துடிதுடித்து 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 3 பேரை விஷம் வைத்து கொலை செய்த முருகனை இராயக்கோட்டை போலீசார் கைது செய்திருந்த நிலையில், இந்த வழக்கு நான்கு ஆண்டுகளாக ஒசூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று 3 பேரை விஷம் வைத்து கொலை செய்த முருகன் என்பவருக்கு 3 ஆயுள் தாண்டனை மற்றும் 3, 000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி அசோகன் தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராதத்தொகை செலுத்த தவறினால் தலா எண்ணிக்கைக்கு 6 மாத மெய்க்காவல் சிறையில் அடைக்க தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.