ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கான புள்ளி இன்று ஆரம்பம்… இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி…

22 July 2020, 10:41 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கான புள்ளி இன்று ஆரம்பம் என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கீழையூரில் உள்ள மூன்று சாலை சந்திப்பில் உள்ள பெரியார் சிலையை கடந்த 16ம் தேதி இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் அவமதிப்பு (செருப்பு மாலை) அணிவித்தது குறித்து திராவிடர் கழகம், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் பெரியாரின் சிலை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து உடனடியாக 18ம் தேதி பெரியார் சிலையை அவமதிப்பு செய்ததாக கூறி இந்து மக்கள் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் மணி என்பவரை திருக்கோவிலூர் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மணியின் குடும்பத்தினரும் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நேரில் ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் பேசுகையில், கருப்பர் கூட்டத்தால் தமிழகத்தில் உள்ள இந்துக்களின் மனம் புண்பட்டு உள்ளது. இதனை திமுக கூட கண்டித்து இருக்கிறது. தமிழகத்தின் பல இடங்களில் கோயில்கள் தீ வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தாமதமாக எடுத்திருந்தாலும் வரவேற்கிறோம், உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தியாவின் மற்ற மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள போது, தமிழகத்தில் ஏன் நிறைவேற்றவில்லை தமிழகஅரசு 10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்றார்.