கதவுகளை திறந்து வைக்கும் வீடுகளை குறிவைக்கும் டவுசர் கொள்ளையர்கள்: ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கும் போலீசார்…நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

Author: Rajesh
7 May 2022, 6:02 pm
Quick Share

நாமக்கல்: இரவுநேரத்தில் கதவுகளை திறந்து வைத்து தூங்கும் பொதுமக்களின் வீடுகளை குறிவைத்து டவுசர் கொள்ளையர்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டியில் கேபிள் ஆபரேட்டர் வேலு என்பவரது வீட்டில் கடந்த 5ம் தேதி இரவு 9 சவரன் நகை கொள்ளை போன நிலையில், அடுத்தநாள் 6ம் தேதி இரவும், அதேப் பகுதியில் உள்ள மகாலட்சுமி நகரில் வசித்து வரும் வினோத் – நதியா தம்பதியினர் வீட்டில் 4 சவரன் நகையும், ஆரியமாலா வீட்டில் 3 சவரன் நகையும் கொள்ளை போனது.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் திறந்திருக்கும் வீட்டிற்குள் புகுந்து, எந்தவித சத்தமும் போடாமல் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் இல்லாமல் மிரட்டி நகைகளை அடுத்தடுத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தபோது, டவுசர் அணிந்த கொள்ளையர்கள் முகமூடி அணிந்து கொண்டு நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்தச்சம்பவங்கள் குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருவதுடன், பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வீட்டை திறந்து வைத்து தூங்க வேண்டாம் எனவும் எச்சரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரன் தேஜஸ்வியிடம் கேட்ட போது, விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Views: - 539

0

0