இதைச் செய்தது 16 வயது சிறுவனா..? தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் கைது..!

12 October 2020, 3:09 pm
Dhoni_Ziva_UpdateNews360
Quick Share

நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் 2020’இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்ததை அடுத்து எம்.எஸ்.தோனியின் 5 வயது மகள் ஷிவா தோனி சமூக ஊடகங்களில் குறிவைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று தோனியின் மகளுக்கு அவரது மனைவி சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பாலியல் பலாத்கார அச்சுறுத்தல் விடுத்ததாக குஜராத் போலீசாரால் ஒரு 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷிவாவுக்கு எதிரான அருவருப்பான கருத்துக்கள் சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தைத் தூண்டின. குஜராத்தின் முந்த்ராவில் இருந்து 16 வயதே ஆன, 12’ஆம் வகுப்பு மாணவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்த ராஞ்சி போலீசாரிடமிருந்து கிடைத்த தகவலுக்குப் பின்னர் அவரை உள்ளூர் போலீசார் அழைத்துச் சென்றனர்.

இன்ஸ்டாகிராமில் அச்சுறுத்தும் செய்தியை பதிவு செய்ததாக ஒப்புக்கொண்ட சிறுவனை விசாரித்ததற்காக கட்ச் போலீஸ் சூப்பிரண்டு சவுரப் சிங் உறுதிப்படுத்தினார்.

“சில நாட்களுக்கு முன்பு தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு அருவருப்பான அச்சுறுத்தல் செய்தி தொடர்பாக நம்னா கபயா கிராமத்தைச் சேர்ந்த 12’ஆம் வகுப்பு மாணவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்” என்று சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த சிறுவன் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ராவைச் சேர்ந்தவர். இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்த பின்னர், ராஞ்சி போலீசார் அந்த சிறுவனின் கணக்கு தொடர்பான தகவல்களை குஜராத் போலீசாருடன் பகிர்ந்து கொண்டு, அந்தக் கருத்துக்களைத் தெரிவித்தவர் அவரா என்று கண்டுபிடிக்கக் கோரியது. 16 வயது சிறுவனின் வாக்குமூலத்திற்குப் பிறகு, அவரை ராஞ்சி போலீசார் கைது செய்வார்கள்.

“குற்றம் சாட்டப்பட்டவர் கட்ச் மாவட்டத்தில் முந்திராவைச் சேர்ந்தவர் என்று ராஞ்சி போலீசார் எங்களுக்குத் தெரிவித்ததையடுத்து நாங்கள் அவரை விசாரித்தோம். அந்தச் செய்தியை வெளியிட்டவர் சிறுவன் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதால் அவர் ராஞ்சி போலீசில் ஒப்படைக்கப்படுவார்.” என்று கட்ச் எஸ்.பி. சிங் கூறினார்.

இந்த விவகாரத்தில் மேலும் விசாரிக்க ராஞ்சி போலீசார் இன்று கட்சை அடைந்து 16 வயது சிறுவனை காவலில் எடுத்து விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிறார் நீதிச் சட்டத்தின்படி இந்த வழக்கில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி தற்போது ஐபிஎல் 2020’இல் சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்துகிறார். அவரது அணி ஒரு சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தவில்லை மற்றும் இந்த சீசனில் முதல் ஏழு ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியடைந்துள்ளது. இதனால் கடுப்பான சில தீவிர ரசிகர்கள் தோனி மற்றும் அவரது குடும்பத்தினரை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.