ஐபிஎல் 2020 மூலம் பிசிசிஐ பெற்ற வருமானம் இவ்வளவா..? பிசிசிஐ பொருளாளர் தகவல்..!

23 November 2020, 11:40 am
IPL_2020_BCCI_UpdateNews360
Quick Share

கொரோனா பெருந்தொற்றால் கடந்த மார்ச் மாதத்தில் நடக்கவிருந்த ஐபிஎல் 2020 போட்டிகள் மிகத் தாமதமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த தொடரின் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) சுமார் 4,000 கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

மார்ச் 2020’இல், கொரோனா வைரஸ் வெடித்தது பிசிசிஐ அமைப்பை இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) 2020’ஐ ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க கட்டாயப்படுத்தியது. பின்னர் ஏப்ரல் மாதத்தில், ஐபிஎல் தொடர் காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பிசிசிஐயால் ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு நடத்த முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.

ஐபிஎல் போட்டிகள் மூலம் பிசிசிஐக்கு பல்லாயிரம் கோடி வருமானம் வரும் நிலையில், அதை இழந்துவிட விரும்பாமல், நாட்டிற்கு வெளியே போட்டிகளை நடத்தும் சாத்தியக் கூறுகள் குறித்து தொடர்ந்து பரிசீலித்து வந்தது. 

இதையடுத்து ஜூலை மாதம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் தொடர் நடப்பதை உறுதிப்படுத்தியது. பத்தாண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, ஐபிஎல் போட்டித் தொடர் முழுவதும் இந்தியாவுக்கு வெளியே நடைபெற்றது தற்போது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் உரிமையாளர்கள் ஆகஸ்ட் மாதத்தில் தங்கள் வீரர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு அழைத்துச் சென்றனர். நவம்பர் 10’ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியைத் தோற்கடித்து ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது.

இந்நிலையில் போட்டியை சிறப்பாக நடத்திக் கொடுத்ததற்கு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு பிசிசிஐ அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே பிசிசிஐ வெற்றிகரமாக ஐபிஎல் போட்டித் தொடரை நடத்தியதன் மூலம் ரூ 4000 கோடி சம்பாதித்தது. பிசிசிஐயின் பொருளாளர் அருண் துமால் வெளியிட்டுள்ள ஒரு தகவலில், கொரோனா தொற்றுநோய்களின் போது பிசிசிஐ சம்பாதித்த தொகையை வெளிப்படுத்தினார்.

“கடந்த ஐபிஎல் உடன் ஒப்பிடும்போது வாரியம் கிட்டத்தட்ட 35 சதவீத செலவைக் குறைக்க முடிந்தது. தொற்றுநோய்களின் போது நாங்கள் ரூ 4,000 கோடி சம்பாதித்தோம். எங்கள் தொலைக்காட்சி பார்வையாளர்கள் சுமார் 25 சதவீதம் உயர்ந்தனர். எங்களுக்கு மிக உயர்ந்த தொடக்க விளையாட்டு (மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்) மூலம் அதிக பார்வையாளர்கள் கிடைத்தனர். ஐபிஎல் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க 1,500’க்கும் மேற்பட்டோர் உழைத்துள்ளனர்.” என்று அவர் கூறினார்.

கொரோனா குறித்த கவலை நீடித்து வந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம், 30,000 கொரோனா சோதனைகளை நடத்தியது என்பதையும் துமல் வெளிப்படுத்தினார். தாக அவர் மேலும் கூறினார்.

இந்த சோதனைகளின் போது, சென்னை சூப்பர் கிங்ஸைச் சேர்ந்த மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இரு வீரர்களும் அடங்குவர். 

இதற்கிடையே, ஐபிஎல் மூலம் 4,000 கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ள பிசிசிஐ, போட்டியை நடத்தியதற்காக, எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ 100 கோடி கட்டணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

Views: - 0

0

0