ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய ஆண்டி முர்ரே!

22 January 2021, 10:11 pm
Quick Share

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், அடுத்த மாதம் துவங்குகிறது. முன்னதாக தற்போது ஆஸ்திரேலியாவில் அதிகமாகப் பரவுவதால் பாதுகாப்பு கருதி இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி இந்த டென்னிஸ் தொடர் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி துவங்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கப் பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரேவுக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மெயின் டிராவில் நுழையும் வாய்ப்பு சுமார் 2 ஆண்டுக்குப் பின் ஆண்டி முர்ரேவுக்கு கிடைத்தது. ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஐந்து முறை இரண்டாவது இடம் பிடித்துள்ள முர்ரே நீண்ட இடைவேளை பின் இதில் பங்கேற்க இருந்தார். இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பிரிட்டனில் இவர் நீண்ட நாட்கள் தங்கவேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இவர் தனக்கு வழங்கப்பட்ட வைல்டு கார்டை பயன்படுத்தப்போவது இல்லை என்பதை உறுதி செய்துள்ளார். கடந்தாண்டு ஜனவரி மாதம் இடுப்புப் பகுதியில் இவர் அறுவைச்சிகிச்சை மேற்கொண்டார். இதனால் மீண்டு வரக் கடுமையாகச் சிரமப்பட்டார் ஆண்டி முர்ரே. இதற்கிடையில் மெல்போர்னில் ஏற்கனவே நிலவும் தனிமைப்படுத்துதல் குழப்பம்,

மற்றும் பல்வேறு சிக்கல் காரணமாக முர்ரேவின் தாமதமான வருகைக்குத் தீர்வு காண ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒருங்கிணைப்பாளர்களும் திணறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் முர்ரே இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. குழப்பங்கள் ஒருபுறம் இருந்த நிலையிலும் வைரஸ் தொற்றில் இருந்து இவர் தப்ப முடியாது என்பதால், மெல்போர்ன் தொடரை இவர் தவறவிட்டுள்ளார்.

Views: - 0

0

0