ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச்சுற்றில் அங்கிதா ரெய்னா ஏமாற்றம்!

13 January 2021, 10:09 pm
Quick Share

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வியடைந்தார்.

ஆஸ்திரேலியாவில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி துவங்கவுள்ளது. இதன் பிரதான சுற்றில் நுழைவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது துபாயில் நடக்கிறது. இந்நிலையில் இந்த தகுதிச்சுற்றின் மூன்றாவது சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, செர்பியாவின் டேனிலோவிக்கை எதிர்கொண்டார்.

இதன் முதல் செட்டை 2-6 என ரெய்னா இழந்தார். ஆனால் பின் இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்ற ரெய்னா, 6-3 என எளிதாகக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். ஆனால் மூன்றாவது செட்டின் துவக்கம் முதல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னா 1-6 எனக் கோட்டைவிட்டார். இதன் மூலம் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 2-6, 6-3, 1-6 என செர்பியாவின் டேனிலோவிக்கிடம் தோல்வியடைந்தார்.

இப்போட்டியில் அங்கிதா தோல்வியைச் சந்தித்த போதும் இரண்டாவது செட்டில் கடினமான போராட்டத்தை வெளிப்படுத்தினார். துபாய் மற்றும் தோஹாவில் நடக்கும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் 16 ஆண்கள் மற்றும் பெண்களைத் தவிர்த்து ஆஸ்திரேலிய ஓபன் ஒருங்கிணைப்பாளர்கள், மெல்போர்ன் செல்ல ஆறு மாற்று வீரர்கள் அல்லது தோல்வியடைந்த அதிர்ஷ்டசாலிகளுக்கும் டிக்கெட்டுகளை வழங்கவுள்ளனர். வரும் பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு முன்பாக மெயின் டிராவில் இருந்து விலகும் வீரர்களுக்கு மாற்றாக இந்த வீரர்களை அவர்கள் மெல்போர்னுக்கு அனுப்புவார்கள்.

மற்ற வீரர்களைப் போலவே இந்த தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளும் கடுமையான தனிமைப்படுத்துதல் விதிகளைப் பின்பற்ற வேண்டும். தகுதிச்சுற்றின் இறுதி முடிவுகளைப் பொறுத்துத் தோல்வியடைந்த அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால் அங்கிதாவிற்கு மெயின் போட்டியில் பங்கேற்க இன்னும் வாய்ப்பு உள்ளது.

Views: - 10

0

0