ஜாகிர் கான் சாதனையைத் தகர்த்த அஸ்வின்: இந்திய பவுலர்கள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேற்றம்!

24 February 2021, 9:52 pm
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறினார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். இதையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் ஒட்டு மொத்த கிரிக்கெட்டிலும் சேர்த்து இந்தியா அணிக்காக அதிகவிக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஜாகிர் கானை (597 விக்கெடுகள்) முந்தினார் அஸ்வின்.

தற்போது வரை அஸ்வின் மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணிக்காக (397+150+52) மொத்தமாக 599 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே (953 விக்கெட்), ஹர்பஜன் சிங் (707), கபில் தேவ் (687) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இதற்கிடையில் இந்த தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட் என்ற மைல்கல்லையும் அஸ்வின் எட்டவுள்ளார். இவர் இன்னும் 3 விக்கெட் கைப்பற்றும் பட்சத்தில் இந்த சாதனையை எட்டுவார்.

Views: - 19

0

0