‘500’ஐ தொடும் புர்ஜ் கலிஃபா இஷாந்த் சர்மா… அஸ்வின் கணிப்பு!

8 February 2021, 8:53 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது 300 ஆவது விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் கபில்தேவ் (434 விக்கெட்), ஜாகீர்கான் (311 விக்கெட்) ஆகியோரை தொடர்ந்து 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமை பெற்றார் இஷாந்த் சர்மா. இந்நிலையில் இஷாந்த் சர்மா மிகவும் கடினமாக உழைக்கக் கூடிய கிரிக்கெட் வீரர் என்றும் விரைவில் அவர் டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்றும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில், “இந்திய டிரஸ்ஸிங் ரூமில் உள்ள கிரிக்கெட் வீரர்களில் இஷாந்த் சர்மா கடினமாக உழைக்கக் கூடிய வீரர்களில் ஒருவர். கடந்த சில மாதங்களாக கடினமாக உழைத்து வருகிறார். 6.4 என்ற அவரின் உயரமே அவரை கடினமாக உழைக்க வைக்கிறது. இவருக்குக் கடந்த 14 ஆண்டுகளாக இதுவே மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. கடந்த 2008ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்று ரிக்கி பாண்டிங் (2007-08) விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

சர்வதேச அரங்கில் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சாதாரண விஷயமல்ல. இதுவே மிகப்பெரிய சாதனையாகும். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் விரைவில் 400 விக்கெட் அல்லது 500 விக்கெட்டுகளை எட்டுவார் என நினைக்கிறேன். அவரைப் பற்றி ஒரு சாதகமான விஷயம் என்று சொன்னால் அவரின் புன்னகை தான். எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பார். டெஸ்ட் போட்டிகளில் பவுலிங் செய்து களைத்துப் போன போதும் அவரது முகத்தில் சிரிப்பு இருந்து கொண்டே இருக்கும். இன்றைய போட்டியிலும் கூட உனக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைக்காது என நினைக்கிறேன் என்று அவரிடம் தெரிவித்தேன். அதற்குப் பரவாயில்லை எனக்கு உண்மையில் களைப்பாக உள்ளது என்று வேடிக்கையாகக் கூறி சிரித்தார். வேடிக்கையாக எதையும் அணுகும் வீரர்களில் அவரும் ஒருவர்” என்றார்.

இதற்கிடையில் தற்போது இஷாந்த் சர்மா 98 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இன்னும் இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் பட்சத்தில் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் இஷாந்த் சர்மா. இந்நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் 14 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட்டுகள் என்ற புதிய மைல்கல்லை எட்டுவார்.

Views: - 0

0

0