ஆஸி ஓபன்: தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 25 வீரர்கள்!

17 January 2021, 10:06 pm
Aus Open Corona - Updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்களில் மேலும் 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ள 1200 வீரர்களை அழைத்து வர ஆஸ்திரேலிய டென்னிஸ் கூட்டமைப்பு 15 தனி விமானங்களை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விமானங்கள் மூலம் வீரர்கள் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து மெல்போர்னுக்கு வந்தடைந்தனர். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வந்த தனி விமானத்திலிருந்தவர்களுக்கும் மற்றும் துபாயிலிருந்து வந்த தனி விமானத்தில் இருந்தவர்களில் மூன்று பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலிருந்து வந்த விமானத்திலிருந்த 24 வீரர்களும், அபுதாபியிலிருந்து வந்த விமானத்தில் இருந்த 23 வீரர்களும் ஓட்டலிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த விமானத்தில் வந்த 47 வீரர்களும் 14 நாட்களுக்கு ஓட்டல் அறையை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. இதற்கிடையில் தற்போது தோஹாவில் இருந்து வந்த மேலும் 25 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே 47 வீரர்கள் தற்போது 25 வீரர்கள் என மொத்தமாக 72 வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இரு வாரங்களுக்கு ஓட்டலைவிட்டு வெளியேற முடியாத அளவு கடுமையாகத் தனிமைப்படுத்துதல் விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் கட்டுப்பாடுகளுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தோஹாவில் இருந்து மெல்போர்ன் வந்த தனி விமானத்தில் 25 வீரர்கள் உட்பட 58 பேர் பயணித்திருந்தனர். இதில் ஒரு பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா உறுதியான நபர் விளையாடும் வீரர் அல்ல. அவர் விமானத்தில் நுழைவதற்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று இல்லை” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்த பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரேவிற்கு தொற்று உறுதியானது. அதேபோல அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸுக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த வருடம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் முழுமையாக நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரை ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு கொரோனா வைரஸ் மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 9

0

0