ஆரோன் பின்ச் அரைசதம்: மீண்டும் நியூசி.,யை வீழ்த்திய ஆஸி!

5 March 2021, 3:22 pm
Quick Share

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில் கேப்டன் ஆரோன் பின்ச் அரைசதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று போட்டியின் முடிவில் நியூசிலாந்து 2 போட்டியில் வென்றது. மூன்றாவது டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இரு அணிகள் மோதிய நான்காவது டி-20 போட்டி இன்று வெல்லிங்டனில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு கேப்டன் பின்ச் (79*) அரைசதம் அடித்துக் கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் அடித்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாகவே கைல் ஜேமிசன் 30 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 18.5 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்த டி-20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-2 என சமன் செய்துள்ளது. இரு அணிகள் மோதும் கடைசி டி-20 போட்டி வரும் 7ம் தேதி வெல்லிங்டனில் நடக்கிறது.

Views: - 1

0

0