காயம் காரணமாக ஆஸி.,யின் முன்னணி வீரர் விலகல் : சாதகமாக்கிக் கொள்ளுமா இந்தியா..?

30 November 2020, 5:29 pm
india vs australia - updatenews360
Quick Share

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி விட்டது. எஞ்சிய கடைசி ஒருநாள் போட்டி வரும் 2ம் தேதி நடக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் வார்னர் காயம் காரணமாக விலகியுள்ளார். நேற்று நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, தவான் அடித்த பந்தை மிட் – ஆப் திசையில் இருந்து டைவ் அடித்து வார்னர் பிடிக்க முயன்றார். அப்போது, தொடை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த அடி ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட வலியால் அவர் முடியாமல் மைதானத்திலேயே படுத்து விட்டார்.

பிறகு, பெவிலியனில் இருந்து வந்த மருத்துவ உதவியாளர் அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து, ஓய்வு தேவைப்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், கடைசி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். மீண்டும் உடற்தகுதியை வார்னர் நிரூபிக்கும்பட்சத்தில் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார்.

ஏற்கனவே, கடந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவின் சிறப்பான பேட்டிங்கால், இந்திய அணி தோல்வியை தழுவியது. தற்போது, வார்னரின் விலகலை இந்திய வீரர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை 2ம் தேதி நடக்கும் போட்டியில் தெரிய வரும்.

Views: - 13

0

0