ஆஸி.க்கு எதிரான PINK BALL டெஸ்ட் : சதமடித்து சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா…!! அடேங்கப்பா, ஒரு போட்டியில் இவ்வளவு சாதனைகளா..?

Author: Babu Lakshmanan
1 October 2021, 2:03 pm
smiriti mandhana - updatenews360
Quick Share

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கு இடையிலான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 93 ரன்னாக இருந்த போது ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய மந்தனா, 51 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன்மூலம், 2013க்கு பிறகு மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதங்களில் முதன்மையானது என்ற பெருமையை பெற்றார்.இந்திய அணி 132 ரன்கள் எடுத்திருந்த போது முதல்நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது.

இதைத் தொடர்ந்து, 2வது நாள் ஆட்டத்தையும் ஸ்மிரிதி மந்தனா சிறப்பாகவே தொடங்கினார். அபாரமாக ஆடிய அவர் 170 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார். பின்னர், 127 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

25 வயதான ஸ்மிரிதி மந்தனா, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் சதமடித்த 5-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Views: - 633

0

0