சத்தியமா இந்த ஐடியா கோலியிடம் இருந்து வந்தது தான்: ரத்தோர் தகவல்!

27 January 2021, 3:44 pm
kohli - updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை முன்னதாக களமிறக்கும் ஐடியா கேப்டன் விராட் கோலி கொடுத்தது என இந்தியா பேட்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 – 1 என கைப்பற்றி அசத்தியது. சிட்னியில் நடந்த டெஸ்டில் சற்றும் எதிர்பாராத விதமாக ரஹானே அவுட்டான பின்னர் இந்திய வீரர் ரிஷப் பண்ட் களமிறங்கினார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் ஹனுமா விஹாரி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பண்ட் களமிறங்கினார்.

ஆனால் பண்ட் களமிறங்கியது இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமான விஷயமாக அமைந்தது. அதேபோல எதற்காக அவர் களமிறக்கப்பட்டாரோ அந்த வேலையை பண்ட் மிகச் சிறப்பாகச் செய்தார். அந்த போட்டியில் அவர் 97 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு மிக நெருக்கமாகக் கொண்டு சென்றார். ஆனால் இந்த போட்டி கடைசியில் டிராவில் முடிந்தது.

இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியிலும் பண்ட் பெரிய அளவில் கைகொடுக்க, இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த யோசனையை இந்திய கேப்டன் விராட் கோலி தான் கொடுத்ததாக தற்போது இந்திய பேட்டிங் பயிற்சியாளர் ரத்தோர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் யூடியூப் சேனலில் ரத்தோர் கூறுகையில், “உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்த யோசனையை விராட்கோலி கொடுத்ததுதான். அவர் ஒரு வேளை இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களை களமிறக்கினால் சாதகமான விஷயமாக இருக்கும் என்றார்.

பண்ட்டை முன்னதாக களமிறக்கும்பட்சத்தில் இந்திய அணிக்கு இடது வலது காம்பினேஷன் கிடைக்கும் என்ற சிறந்த யோசனையைக் கொடுத்தார். இதை கேப்டன் ரஹானே உடனும் ஆலோசனை செய்தோம். தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்து வரும் நிலையில் ரன்களை அதிகரிக்க முடிவு செய்தோம். போட்டியை டிரா செய்ய வேண்டும் என்பது எங்களின் எண்ணம் கிடையாது. அதனால் பண்ட்டை களமிறக்குவது மட்டுமே சிறந்த யோசனையாக அப்போது தோன்றியது.

அதேபோல பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இடது வலது காம்பினேஷனில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். அதற்கு ஏற்ப ஆஸ்திரேலிய பவுலர்களும் அவர்களுக்குப் பந்து வீச திணறினர். இதை அனைத்தும் கொண்டு தான் பண்ட் களமிறக்கும் திட்டம் சாத்தியமானது. மேலும் நமக்குச் சிறந்த துவக்கம் கிடைத்தால், ரிஷப் பண்ட்டை 4-வது வீரராகக் கூட களமிறக்கலாம் என முதல் இன்னிங்சில் தெரிவித்திருந்தேன் ஆனால் அது நடக்காமல் போனது” என்றார்.

Views: - 39

0

0