ஜோகோவிச் “விசா”வுக்கு தடை: மீண்டும் ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2022, 5:40 pm
Quick Share

ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளதால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் அவர் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகிறது. டென்னிஸ் போட்டிகளிலேயே மிகவும் முக்கியத்துவம் பெற்றது இந்த போட்டியாகும். இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி வருகிற 17-ந் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் தடுப்பூசி விவகாரத்தில் தயக்கம் காட்டி வருவதால், இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து சந்தேகம் நிலவியது.

ஆஸ்திரேலிய ஓபனை 9 முறை வென்ற அவர் ஒட்டுமொத்தமாக 20 கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. பெடரர், நடாலுடன் இணைந்து அவர் முதல் இடத்தில் உள்ளார். ஜோகோவிச் 21-வது பட்டம் வென்று சாதனை படைக்க ஆஸ்திரேலிய ஓபன் அவருக்கு முக்கியமான போட்டியாகும். இதற்கிடையே தடுப்பூசி செலுத்தாத ஜோகோவிச்சுக்கு மருத்துவ ரீதியிலான விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதை ஜோகோவிச் ஆஸ்திரேலியா சென்றவுடன் தெரிவித்தார். ஆனால் இந்த வி‌ஷயத்தில் ஆஸ்திரேலியா தனது முடிவை மாற்றிகொண்டது. சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறி அவரது விசாவை ரத்து செய்தது.

ஆஸ்திரேலியா வந்த அவர் மெல்போர்ன் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். ஆஸ்திரேலிய குடியேற்ற துறையின் தடுப்பு காவல் மையமாக செயல்படும் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டார்.இதற்கிடையே ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி ஜோகோவிச் மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில் ஜோகோவிச் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் முடிவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாவை ரத்து செய்ய முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் ரத்து செய்துள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகமே. பொது மக்களின் நலன் கருதி என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி 133சி(3) பிரிவின் கீழ் நோவக் ஜோகோவிச் விசாவை ரத்து செய்கிறேன் என அலெக்ஸ் ஹாவ்கே தெரிவித்துள்ளார்.

Views: - 409

0

0